குமுதம், டிசம் 27, 2004

தமிழகம் என்கிற பூங்காவில் தேவகானம் பாடித் திரிந்த இசைக்குயில் பறந்துவிட்டது.

எம்.எஸ். மறைந்துவிட்டார்.

நம்ப முடியவில்லை.

Tribute-Kumudamஅவருக்கும் மரணம் உண்டா? காலத்தின் ஓட்டமும், இறப்பும் எவ்வளவு துயரமானது என்பதை இவரைப் போன்ற பாரத ரத்தினத்தை இழக்கும் போது அல்லவா உணர்ந்து தவிக்கிறோம்.

அவரது இசை ஒலிக்காத கோயில் இல்லை. வீடு இல்லை. ஏன், உணவு விடுதிகளிலும் வியாபார நிறுவனங்களிலும் அவரது சுப்ரபாதம் ஒலித்தவாறு பணிகள் துவங்கும்.

அவர் எப்போதோ பாடிய ‘காற்றினிலே வரும் கீத’மாகட்டும், ‘வண்டாடும் சோலை’யாகட்டும் இன்று கேட்டாலும் மனதை ஈர்த்து மெய்மறக்கச் செய்யும். ‘குறையொன்றுமில்லை’ என்கிற பாடல், குறைகளையெல்லாம் மறக்கச் செய்து பேரின்பதில் ஆழ்த்தும்.

சொல்லப் போனால் கால – தேச வர்த்தமானங்களைக் கடந்து நிற்கும் அமர கீதம் அவருடையது. பாடலின் ஜீவனை ஒளிரச் செய்து பரவசமடையச் செய்த காந்த சக்திக் குரல் அது. கேட்போரை அந்தச் சில கணநேரமாவது தூய்மைப்படுத்தும். அதனால்தான் மகாத்மா தனது மாலை நேரப் பிரார்த்தனையில் மீரா பஜன் பாட வேண்டும் என்று எம்.எஸ். ஸை அழைத்தார்.

எம்.எஸ். கச்சேரி செய்ய அமர்ந்தாலே அந்த மேடைக்கு தனி அழகு ஏற்பட்டுவிடும். உடலில் முதுமையின் தளர்வு தெரிந்த போதும், மேடையில் ஏறி அமர்ந்தவுடன், அவருக்கு ஒரு கம்பீரத் தோற்றம் வந்துவிடும். குரலில் என்றும் மாறாத அதே இளமையின் ஆட்சிதான்.

சங்கீதத்துக்காகவே பிறந்தவர். சங்கீதமாகவே வாழ்ந்தார். அவர் ஒரு சகாப்தம்தான்.

எம்.எஸ். இனி இல்லையா? யார் சொன்னது?

தமிழக இல்லங்களில் அவரது இசை தொடர்ந்து கேட்கத்தான் போகிறது. ‘கண்ணுக்குத் தெரியாமல்’ அந்த இசையோடு அவர் எப்போதும் நம்முடன் இருப்பார்.