பிரேமா நாராயணன், ஆனந்த விகடன், டிசம் 26, 2004

வானம் கூட அழுது, அஞ்சலி செலுத்திய கறுப்பு தினம்!

கானம் பாடிய வானம்பாடியைக் காலம் கவர்ந்து சென்ற துக்கம், சென்னை, கோட்டூர்புரத்தில் நாம் பார்த்த ஒவ்வொரு முகத்திலும் உறைந்திருந்தது. இசையுலகின் முடிசூடா மகாராணியாக ஜொலித்தது மட்டுமல்ல… நல்ல மனைவியாக, தாயாக, பாட்டியாக… எல்லாவற்றையும்விட, யாருக்குமே தீங்கு நினைக்காத நல்ல மனுஷியாக வாழ்ந்த ‘ரோல்மாடல்’ பெண்மணி எம்.எஸ்.!

குரல் வழிப் பரிச்சயம் மட்டுமே கொண்டவர்கள்கூட அவரது பிரிவை எண்ணி உடைந்து போகும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இசைத்தாய். அந்த மகா மனுஷியுடன், பல வருடங்கள் தொடர்ந்து வாழ்க்கையிலும் மேடையிலும் இணைந்திருந்த சிலர், எம்.எஸ். பற்றி இங்கே நினைவுகூர்கிறார்கள்…

விக்கு விநாயக்ராம்:
(எம்.எஸ்-ஸின் கச்சேரிகளில் கடம் வாசித்தவர்)

”மகாபெரியவரிடம் எம்.எஸ். அம்மாவுக்கு இருந்த ஆழ்ந்த பக்தியினால்தானோ என்னவோ, பெரியவாளோட ஜெயந்தி நட்சத்திரமான அனுத்தன்னிக்கு அம்மா பகவானோடு கலந்திருக்கிறார்.

தனக்குனு எதுவும் வெச்சுக்காத தயாள குணம்! சதாசிவம் மாமாவும் அப்படித்தான். ஒருசமயம், உதவி கேட்டு வந்தவாளுக்கு என்ன கொடுக்கிறதுனு யோசிச்ச மாமா, சட்டுனு எம்.எஸ்.அம்மா பக்கம் திரும்பி, ‘குஞ்சம்மா! உன் வளையலைக் கழட்டிக் குடேன்’னு சொல்ல, கொஞ்சமும் யோசிக்காம உடனே கழட்டிக் குடுத்த பரோபகாரி.

முதன்முதல்ல பாட்டுக்குனு வெளிநாடு போய், ‘இண்டியன் மியூஸிக்’ மட்டுமே தெரிஞ்ச மேல்நாட்டு ரசிகர்களுக்கு, கர்னாடக சங்கீதத்தை அறிமுகப்படுத்தினவங்க அம்மாதான! பாடுறது தவிர, அம்மா வீணையும் மிருதங்கமும் நல்லா வாசிப்பாங்க.

அம்மா கச்சேரிகள்ல என்னால ஆயுசுக்கும் மறக்கமுடியாத கச்சேரி, மும்பை ஷண்முகானந்தா ஹால்ல நடந்த கச்சேரிதான்! கச்சேரி ஆரம்பிக்க வேண்டிய நேரத்துல கரண்ட் போயிடுச்சு. மைக் வேலை செய்யலை. எந்த லைட்டும் எரியலை. என்ன பண்றதுன்னு எல்லாருக்கும் குழப்பம். அம்மா துளியும் யோசிக்கலை! பெரியவாளை மனசுல நினைச்சுண்டு, மைக் இல்லாமலேயே பாட ஆரம்பிச்சார். ஹால்ல அங்கங்கே மெழுகுவத்திகள் எரிய, இருளும் ஒளியும் கலந்தாற்போன்ற அந்த ரம்மியமான வெளிச்சத்துல, தொடர்ந்து நாலு மணிநேரம் மனசை உருக்குற குரல்ல கச்சேரி பண்ணினார் அம்மா. அந்தப் பரவச அனுபவம், இறைவனோட சந்நிதியில மட்டுமே கிடைக்கக்கூடிய ஒண்ணு!

மாலா சந்திரசேகர்:
(மூத்த மகள் ராதா விஸ்வநாதனின் மூத்த மருமகள் மாலா. புல்லாங்குழல் கலைஞர். பாட்டியின் மிகப் பிரியமான பேரனின் மனைவி என்பதாலும், இசைத் துறையிலேயே இருந்தவர் என்பதாலும், எம்.எஸ்- மாலாவுக்கு இடையேயான பந்தம் மிகவும் அந்நியோன்யமானது)

”பாட்டி எங்களை விட்டுப் போன டிசம்பர் 11-ம் தேதி எனக்கு மறக்க முடியாத நாள். இருபது வருஷம் முன்னால இதே நாள்லதான், என்னோட நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த மாமேதையின் குடும்பத்துக்கு மாட்டுப் பொண்ணாகி, அவங்க பக்கத்துலயே இருந்து, அவங்களோட ஒவ்வொரு அசைவையும் அணுஅணுவா ரசிக்கிற வாய்ப்பு கிடைச்சுது என்னோட பாக்கியம்.

சங்கீதத்துல மட்டுமல்ல, சமையல்லயும் பாட்டி எக்ஸ்பர்ட்! செய்கிற எந்தக் காரியத்துலேயும் ஒரு நறுவிசு இருக்கும். அவங்க காய்கறி நறுக்கினா, அவ்வளவு பக்குவமா ஒவ்வொரு துண்டும் ஒரே அளவா இருக்குறமாதிரி கச்சிதமா நறுக்குவாங்க. கோலம் போட்டாங்கன்னா, ஒரு மெல்லிசு நூல் அவங்க கையிலேர்ந்து தரையில் இறங்கற மாதிரி, விரல்கள் வழியா மாவு வழியும், பூத்தொடுத்தா, அதில் ஒரு அழகு. தலை வாரினா, அதிலே ஒரு பதவிசு. கச்சேரிக்குக் கிளம்பும் போதெல்லாம் பெரியவா கொடுத்த குங்குமத்தைத்தான் நெத்தியிலே அழகா வெச்சிட்டுப் போவாங்க. குங்குமம் இட்டுக்கறதுகூட வட்டமா, துளி பிசிர் இல்லாம இட்டுப்பாங்க.

காஞ்சிபுரத்துலேர்ந்து பாட்டிக்கு ஸ்பெஷலா தறியில நெய்து பட்டுப் புடவை வரும். கசமுசா டிஸைன் எல்லாம் இருக்காது. ப்ளெயின் கலர்கள்ல, பளிச்னு ஜரிகையோட இருக்கும். பாட்டிக்காக போட்ட ப்ளூ கலர்தான், ‘எம்.எஸ். ப்ளூ’னு இன்னிக்கு வரைக்கும் பிரபலமாகியிருக்கு. பாட்டிக்கு ஜாதிப்பூன்னா உயிர். அதைத் தொடுத்து பாட்டி வெச்சுக்கிட்டா அந்தப் பூவுக்கே தனிப் பொலிவு வந்துடும்! ரஷ்யா, அமெரிக்கானு எங்கே போனாலும், தலையில பூ வெச்சுக்காம போனதே இல்லை!

பாட்டிக்குக் கோபம் வந்து நான் பார்த்ததேயில்லை. வீட்டுக்கு வந்து போற பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுக்காமல் அனுப்பினதே கிடையாது. பாட்டிக்குத் தொண்டைல டான்சில்ஸ் தொந்தரவு இருந்தது. ஆனா, ‘இந்த நாட்டுக்குக் கடவுள் கொடுத்திருக்கிற மிகப் பெரிய பரிசு இவங்க குரல். அதுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா..?’ னு சொல்லி, ஆபரேஷன் பண்ண மறுத்துட்டார் டாக்டர். அப்புறம் கடவுள் கிருமையால அது மருந்து, மத்திரைலயே சரியாயிடுச்சு!

அவங்களுக்கு என் புல்லாங்குழல் வாசிப்பு பிடிக்கும். தான் குரல்ல பண்ணினதை, நான் குழல்ல பண்றேன்னு மனப்பூர்வமா என்னை ஆசீர்வதித்திருக்காங்க. என் ஜென்மத்துக்கு அது போதும்!”

கெளரி ராம்நாராயணன்:
(சதாசிவத்தின் தங்கை பேத்தியும் பத்திரிகையாளருமான கெளரி, எம்.எஸ். அம்மாவின் செல்லம். குழந்தைப் பிராயத்திலிருந்தே எம்.எஸ். வீட்டில் வளர்ந்து, பல ஊர்களுக்குப் பாட்டியுடன் பயணம் செய்த அனுபவம் உள்ளவர்)

”பாட்டி, அதிகம் படிக்கலையே தவிர தமிழ், இந்தி, சம்ஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம்னு பல மொழிகள் தெரியும். நான் வெளியூர்ல இருக்கறப்போ அடிக்கடி லெட்டர் போடுவா. ‘கெளரி கண்ணூ… போன கச்சேரில ‘கெளரி’னு பாடறச்சே உன்னை நினைச்சுண்டேண்டா கண்ணு’னு பாட்டி எழுதறது நேர்ல பேசற மாதிரியே இருக்கும்.

பாட்டிக்குத் தன் கையால எல்லாருக்கும் பரிமாறுவது பிடிச்ச விஷயம். பாட்டி யாருக்காவது சென்ட் பாட்டில் கொடுத்தாங்கன்னா, அவங்களைப் பாட்டிக்கு ரொம்பப் பிடிச்சிருக்குனு அர்த்தம்!”

ஆர்.கே.ஸ்ரீராம்குமார்:
(எம்.எஸ்.ஸின் கச்சேரிகளில் பல வருடம் வயலின் வாசித்தவர்)

”என் தாத்தா ஆர்.கே. வெங்கட்ராம சாஸ்திரிகள் பிரபல வயலின் கலைஞர். அவரை எம்.எஸ். அம்மாவுக்கு ரொம்ப வருஷமா தெரியும்கிறதால எங்கள் வீட்டு விசேஷம் எல்லாத்துக்கும் அம்மாவும், சதாசிவம் மாமாவும் வந்துடுவாங்க! வர்றது மட்டுமில்லாம, நலங்கு, ஊஞ்சல் மாதிரியான சடங்குகள் நடக்கறப்போ, சுருதிப் பொட்டியை வெச்சிட்டுப் பாட ஆரம்பிச்சிடுவாங்க. எங்கம்மாவோட சீமந்தத்தின்போதும் வந்து பாடியிருக்காங்க! ஆக, நான் கர்ப்பத்துலேயே எம்.எஸ். அம்மாவின் பாட்டைக் கேட்டு வளர்ந்தவன்!

என்ன உடம்புன்னாலும் அம்மாவுக்குக் காலங்கார்த்தால எழுந்து, ஃப்ரெஷ்ஷா குளிச்சாகணும். அப்புறம், அமைதியா பூஜை. ராத்திரி ரொம்ப நேரம் கண் முழிக்கிற வழக்கமே அம்மாவுக்குக் கிடையாது. எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டுட்டுப் படுத்துடுவாங்க! ரொம்ப எளிமையான வாழ்க்கை வாழ்ந்த மகா யோகி அம்மா! அவரது இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது!”