MS Subbulakshmi website MSS, life story, MS Subbulakshmi Photos
  About this Site  |  Contact  |  Home  
MS Subbulakshmi website MSS, life story, MS Subbulakshmi Photos
 
         
 

Articles

MS Subbulakshmi website MSS, life story, MS Subbulakshmi Photos  
 
Tribute to MSS
Upload Your Files
Saga of Steadfast Devotion - Book Release
 

'சகுந்தலா'வின் பொன்விழா

கல்கி, பிப்ர 16, 1942

''தங்கமான படத்துக்குத் தங்க விழாக் கொண்டாடுவது மிகவும் பொருத்தமே'' என்று ஒரு தங்கமான மனுஷர் கூறினார். ''சகுந்தலா''வின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது திருப்புகழ் மணி ஸ்ரீ டி.எம். கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் சொன்னதைத்தான் குறிப்பிடுகிறேன். சென்னை நகரில் ஐம்பது வாரம் மேற்படி படம் ஓடியதை முன்னிட்டு, சென்ற வாரத்தில் சினிமா சென்ட்ரலில் பொன்விழாக் கொண்டாட்டம் நடை பெற்றது. விழாவில் தலைமை வகித்த திருப்புகழ் மணி அவர்கள், படத்தின் அருமை பெருமைகளைப் பாராட்டித் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன், கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு மனமுவந்து ஆசி மொழிகளையும் கூறினார்கள்.

இந்த வைபவத்துக்கு நான் போயிருந்த சமயத்தில், ''சகுந்தலா'' படத்தை முதன் முதலில் நான் பார்த்து விமரிசனம் எழுதியது சம்பந்தமான பழைய ஞாபகங்கள் ஏற்பட்டன. மேற்படி விமரிசனம் நான் சிறையிலிருந்த சமயத்தில் பல பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. அதே விமரிசனத்தைக் ''கல்கி'' யிலும் வெளியிட வேண்டுமென்று நமது பத்திரிகை ஆரம்பித்த புதிதில் பல நேயர்கள் எழுதியிருந்தார்கள். அதைக் காட்டிலும், மேற்படி விமரிசனத்தை நான் எழுத நேர்ந்த வரலாற்றை வெளியிடுவது ரஸமாயிருக்கலாமென்று கருதினேன். அதற்கு இந்தப் பொன்விழா சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மனிதன் எப்படி உயர்கிறான்?

சென்ற 1941ம் வருஷ ஆரம்பத்தில் நான் சத்தியாக்ரஹம் செய்வதற்குச் சித்தமாகிக் கொண்டிருந்த சமயத்தில் ''சகுந்தலா'' படத்தை எடுத்த ஸ்ரீ. டி. சதாசிவம் என்னைப் பார்க்க வந்தார். அவரும் நானும் பழைய சிறைச்சாலை நண்பர்கள். 1922ல் என்னைத் திருச்சி சென்ட்ரல் ஜெயிலுக்குள்ளே கொண்டுவிட்டு, வெளிக்கதவைச் சாத்தியபோது, நான் திக்குத் திசை புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தேன். அச்சமயம் அங்கே ஸ்ரீ சதாசிவம் வந்து, ''நீங்கள் தானே...? கரூரில் கைதியாகி வந்தவர்?'' என்று கேட்டுக் கொண்டே என் கையைப் பிடித்து அரசியல் கைதிகள் இருந்த பகுதிக்கு அழைத்துப் போனார். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு.

மறுபடியும் 1930ல் நாங்கள் தற்செயலாக ஒரே சிறையில் சந்தித்துச் சில காலம் சந்தோஷமாய்க் கழித்தோம்.

இப்போது நான் மறுபடியும் சிறைக்குப் போகிறேன் என்று அறிந்ததும் ஸ்ரீ சதாசிவம் வந்து, ''இந்தத் தடவை நான்தான் ஜெயிலுக்கு வருவதற்கில்லை; உங்களையாவது அனுப்பிவிட்டு வருகிறேன்'' என்று சொல்லி, 21 நாள் என் கூடவே இருந்து, சிறைக் கதவு என் பேரில் சாத்தப்பட்ட பிறகுதான் திரும்பிப் போனார்!

சத்தியாக்கிரஹம் செய்வதற்கு மூன்று நாளைக்குமுன் திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை உற்சவத்துக்கு நாங்கள் போயிருந்தோம். ஆராதனைக்குப் பிறகு சதாசிவம் என்னைப் பார்த்து, ''தஞ்சாவூரில் 'சகுந்தலா' படம் ஓடிக் கொண்டிருக்கிறது. பார்க்கிறீர்களா?'' என்று கேட்டார். டாக்கி பார்ப்பதற்குரிய சந்தர்ப்பம் இதுவல்ல என்று நான் மனதில் எண்ணியபோதிலும், ''இராத்திரி எப்படியும் மாயவரம் போய்விட வேண்டும்; இப்போது உடனே படத்தைக் காட்டினால் பார்க்கிறேன்'' என்றேன். அந்தப்படியே அவர் ஏற்பாடு செய்தார்.

படம் பார்ப்பதற்கு உட்கார்ந்தபோது நான் அதிகமாய் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படப் பிடிப்பின் போது ஏற்பட்ட இடையூறுகளைப் பற்றி அறிந்திருந்தபடியால், படம் சாதாரணமா இருக்குமென்றுதான் எண்ணினேன். ஆனால், கண்வருடைய ஆசிரமத்தில் 'எங்கும் நிறை நாதப்பிரம்மம்' என்ற பாட்டைச் சகுந்தலை பாட ஆரம்பித்ததும், என் எண்ணம் மாறிவிட்டது. போகப் போக வியப்பும் பிரமிப்புமாயிருந்தது. படம் முழுவதிலும் கானாமுத வெள்ளம் பொங்கிப் பெருகி ஓடியது மட்டுமல்ல; 'சகுந்தலை'யின் நடிப்புத் திறமைதான் அதிகமான பிரமிப்பையளித்தது. உயர்ந்த ஹிந்தி படங்களிலும் இங்கிலீஷ் டாக்கிகளிலும் தோன்றும் நட்சத்திரங்களின் நடிப்புக்கு அவருடைய நடிப்பு எவ்விதத்திலும் குறைவாயிருந்ததாக நான் நினைக்கவில்லை. இன்னும் இந்தப் படத்தில் நடித்திருக்கும் எல்லாரும், குழந்தை ராதா வரையில், பெரும்பாலும் நன்றாக நடித்திருப்பதாகவே தோன்றியது.

என்னதான் உயர்ந்த சங்கீதமும் சிறந்த நடிப்புத் திறமையும் இருந்தாலும், கதைப் போக்கையும் சம்பாஷணையையும் கீழ்த்தரமாக்கி, சம்பந்தமில்லாத ஆபாசங்களைப் புகுத்தி, மொத்தத்தில் டாக்கியைப் குட்டிசுவராக்கியிருக்கலாம். அப்படியில்லாமல் நெடுகிலும் எல்லாவிதத்திலும் உயர்தரமாகவே படம் அமைந்திருந்தபடியால் என்னுடைய மகிழ்ச்சி பன்மடங்காயிருந்தது. இவ்வளவு உயர்தரமான தமிழ்ப் படம் ஒன்றைக் கொண்டு வந்ததின் பொருட்டு என் நண்பரை மனதாரப் பாராட்டினேன்.

''உங்கள் அபிப்பிராயத்தை எழுதிக் கொடுக்க முடியுமா?'' என்று அவர் கேட்டார். பிரசுரத்திற்காகத்தான் கேட்கிறார் என்று தெரிந்து கொண்டேன். எனவே, அதைப் பற்றி இரண்டு தினங்கள் யோசனை செய்தேன். ''இந்தப் படத்தைப் பற்றி நமக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல அபிப்பிராயத்துக்கு அபிமானம் ஓரளவாவது காரணமாயிருக்குமா?'' என்று கேள்வியைப் போட்டுக் கொண்டு யோசித்துத் திட்டமான முடிவுக்கு வந்தேன். ''உண்மையாகவே படம் உயர்ந்ததுதான்; சந்தேகமில்லை'' என்றும், ''படத்தைப் பார்க்கும் ரஸிகர்கள் நிச்சயமாக இதே அபிப்பிராயந்தான் கொள்வார்கள்; அபிமானங் காரணமாக எழுதியதென்று ஒருநாளும் நினைக்கமாட்டார்கள்'' என்றும் உறுதி ஏற்பட்டது. அதன் பிறகு என்னுடைய அபிப்பிராயத்தை எழுதிக் கொடுத்துவிட்டு, ஒரு எச்சரிக்கையும் செய்தேன். ''நீங்கள் கேட்டதற்காக எழுதிக் கொடுத்தேன்; ஆனால் பிரசுரிப்பதைப் பற்றி நன்கு யோசித்துச் செய்யுங்கள். நான் நன்றாயிருக்கிறதென்று சொன்னதற்காகவே சிலர் 'நன்றாயில்லை' என்று எழுதுவார்கள்!'' என்றேன். அதற்கு ஸ்ரீ சதாசிவம், ''படம் அடியோடு நஷ்டமாய்ப் போவதாயிருந்தாலும் சரி, நீங்கள் நன்றாயிருக்கிறது என்று சொல்வதே எனக்குப் போதும்'' என்றார். இது அவர் என்னிடம் கொண்ட அன்பைக் காட்டுகிறதே தவிர, தீர்க்காலோசனையைக் காட்டவில்லையென்று தெரிவித்தேன். அதோடு அந்த அத்தியாயம் முடிவுற்றது.

பிறகு, நான் திருச்சி சிறையில் இருந்த சமயத்தில் மேற்படி ''சகுந்தலா'' விமர்சனம் பல பத்திரிகைகளில் ஏககாலத்தில் வெளியாயிற்று. பத்திரிகாசிரியர்கள் மிக்க பெருந்தன்மையுடன் அந்த விமர்சனத்துக்குப் பெரிதும் முக்கியம் கொடுத்துப் பிரசுரித்திருந்தார்கள். சில நாள் கழித்து நான் எதிர்பார்த்தது போலவே வேறு சில பத்திரிகை விமர்சனங்கள் மாறான அபிப்பிராயத்தை வெளியிட்டன. சிறையிலிருந்த பல நண்பர்களின் கவனத்தை இந்த மாறுபட்ட அபிப்பிராயங்கள் கவர்ந்தன. அவர்களில் சிலருடன் இந்த விஷயமாக நான் பேசும்படி நேர்ந்தது.

முக்கியமாக, தலைவர் ஸ்ரீ சத்தியமூர்த்தி அவர்கள் என்னை இது விஷயமாய்ப் பிடித்துக் கொண்டார். காவியம், கலை ஆகியவைகளில் ஸ்ரீ சத்தியமூர்த்திக்கு மிகவும் ருசியுண்டு என்பது தெரிந்த விஷயமே.

''காளிதாஸனுடைய சாகுந்தலத்தைக் கொலை செய்திருக்கிறதாமே; வாஸ்தவந்தானா?'' என்று அவர் கேட்டார்.

''பாரதத்திலுள்ள சகுந்தலைக் கதையைக் காளிதாஸன் கொலை செய்திருக்கிறான் என்று சொன்னால் சரியாயிருக்குமா?'' என்று நான் கேட்டேன். ''சரியாயிருக்காது'' என்றார். ''அப்படியேதான் இதுவும். கதையை நாடகமாக்கிய போது காளிதாஸன் சில மாறுதல்களைச் செய்திருக்கிறான். நாடகத்தை டாக்கியாக எடுத்தவர்கள் அந்த அளவில் கூட மாறுதல் செய்யாமல் சாகுந்தலத்தின் கதைப் போக்கையே பெரிதும் பின் பற்றியிருக்கிறார்கள். காளிதாஸனைக் கொலை செய்துவிட்டதாகச் சொல்கிறவர்கள் சாகுந்தலத்தை வாசித்திருப்பார்கள் என்று நம்புவதற்கில்லை. நான் சாகுந்தலத்தை முன்னம் மொழி பெயர்ப்பில் வாசித்திருக்கிறேன்; சிறைக்கு வந்த பிறகு அசல் காவியத்தையே வாசித்தேன். ஸம்ஸ்கிருத காவியங்களில் காளிதாஸனுடைய சாகுந்தலம் எந்தப் பதவியை வகிக்கிறதோ, அதே பதவியைத் தமிழ்ப் படங்களில் 'சகுந்தலா' வகிக்கிறது. நீங்கள் விடுதலையாகிப் படத்தைப் பார்த்தால் நிச்சயம் நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்'' என்றேன்.

இன்னொரு நண்பர், ''சகுந்தலை இராத்திரியில் எழுந்து துஷ்யந்தனைத் தேடிப் போனதாகக் காட்டியிருக்கிறதாமே? இது பிசகில்லையா?'' என்று கேட்டார்.

இது பிசகா, இல்லையா என்று விசாரிப்பதற்கு முன், காளிதாஸனுடைய சாகுந்தலத்தில் இது விஷயமாக என்ன இருக்கிறதென்று பார்க்கலாம். சகுந்தலையும் துஷ்யந்தனும் பேசிக் கொண்டிருக்கும்போது கெளதமியின் குரல் கேட்கிறது. உடனே சகுந்தலை பிரிய மனமின்றி துஷ்யந்தனைப் பிரிந்து செல்கிறாள். அவளுடைய வார்த்தைகளில், ''மறுபடியும் சந்திப்போம்'' என்ற சங்கேதமான வாக்குறுதி இருக்கிறது.

ஆகவே, துஷ்யந்தனும் சகுந்தலையும் மறுபடியும் சந்திக்கிறார்கள் என்று ஏற்படுகிறது. அப்படி அவர்கள் சந்தித்திராவிட்டால், மேலே கதையே கிடையாது! பரத கண்டதுக்குப் பெயரும் புகழும் தந்த பரதன் பிறந்திருக்கப் போவதுமில்லை.

சரி : மறுபடியும் அவர்கள் சந்தித்தார்களென்றால், பகலிலேதான் சந்தித்திருக்க வேண்டுமென்பதற்கு ஏதேனும் விசேஷ காரணம் உண்டா? ஒரு புருஷனும் ஸ்திரீயும் பரஸ்பரம் சிறிது நேரத்துக்கு மதியிழந்து போனார்கள் என்றால் அதற்குப் பட்டப் பகலின் வெட்ட வெளிச்சத்தைவிட, வெண்ணிலவு எரிக்கும் நள்ளிரவு நேரமே அதிகம் ஏற்றதல்லவா? அதுவே இயற்கையுமல்லவா? பின், சகுந்தலை இராத்திரியில் துஷ்யந்தனைப் பார்க்கப் போனாள் என்று காட்டியிருப்பதில் வேறு என்ன பிசகு இருக்கக்கூடும்? இது தவறு என்றால், கதையே தவறாகும். இதன் பொறுப்பு வியாஸரையும் காளிதாஸனையும் சேருமே தவிர இந்தப் படம் பிடித்தவர்களைச் சேராது.

சகுந்தலை துஷ்யந்தனைப் பார்த்து, ''அட பாவி!'' என்று சொன்னதைப் பற்றி ஆட்சேபம் இன்னொரு சிநேகிதருக்கு ஏற்பட்டது. ''அதெப்படி புருஷனைப் பார்த்து மனைவி 'அட பாவி!'' என்று சொல்லலாம்? இது ஹிந்து ஸ்திரீகளின் பதிவிரதா தர்மத்துக்கு உகந்ததா?'' என்று கேட்டார்.

''நீங்கள் படத்தைப் பார்க்காததினால் இப்படிச் சொல்கிறீர்கள். எந்த சந்தர்ப்பத்தில் சகுந்தலை 'அடபாவி!' என்று சொல்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியாது. துஷ்யந்தனைப் பார்த்து சகுந்தலை முதலில் பேச ஆரம்பிக்கும்போது 'பிராணேசா!' என்று ஆரம்பிக்கிறாள். அவன் தன்னைத் தெரிந்து கொள்ளாமல் பேசியதைக் கேட்ட பிறகு, 'ராஜன்!' என்கிறாள். பிறகு துஷ்யந்தன் அவளை 'விபசாரி!' என்று சொன்னபோதுதான் ஆத்திரம் பொங்கி 'அட பாவி!' என்கிறாள். சகுந்தலை மகா பதிவிரதையாயிருந்ததினால்தான் அப்படிச் சொல்கிறாள். அந்த சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருத்தமான வார்த்தை அதுதான்!'' என்றேன்.

அதோடு காளிதாஸன் மேற்படி சந்தர்ப்பத்தில் உபயோகப் படுத்தியிருக்கும் வார்த்தை என்னவென்பதையும் அவருக்கு எடுத்துக் காட்டினேன். ''அநார்யா!'' என்று சகுந்தலை இந்த இடத்தில் துஷ்யந்தனைப் பார்த்துச் சொல்கிறாள். ''அநார்யா'' என்றதும், இந்தக் காலத்து ஆரியர் - திராவிடர் பிரிவினையையோ ஆரியர் - யூதர் வேற்றுமையையோ ஞாபகப்படுத்திக் கொள்ளகூடாது. ''ஆரியன்'' என்றால், ''மேலோன்'' என்று பொருள். ''அநாரியன்'' என்றால், ''கீழ்மகன்'' என்றும் அர்த்தம். ''கீழ்மகன்'' என்பது ''அடபாவி'' என்பதைவிட உயர்வானதில்லை. மேலும், வால்மீகி இராமாயணம் சுந்தரகாண்டத்தின் தமிழ்மொழி பெயர்ப்பில், சீதை இராவணனைப் பார்த்து, ''அநார்யா!'' என்று சொல்வது, 'அட பாவி!'' என்றே மொழி பெயர்க்கப்பட்டிருப்பதையும் மேற்படி நண்பருக்கு எடுத்துக் காட்டினேன்.

இந்த விவகாரங்களின் பயனாக, ''சகுந்தலை''யைப் பற்றி நான் கொண்டிருந்த உயர்ந்த அபிப்பிராயம் உறுதியாயிற்றே தவிர, அணுவளவேனும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

சிறையிலிருந்து வெளிவந்ததும், நான் தெரிந்து கொள்ள விரும்பிய அநேக விஷயங்களில் ''சகுந்தலா'' படம் எப்படி ஓடிற்று என்பதும் ஒன்று. மாயவரத்தில் என் நண்பர் ஒருவர், ''இங்கே சகுந்தா ஓடுகிறது; படம் அபாரம்'' என்றார். அவர் படித்த மனுஷர்; பொறுப்புள்ள உத்தியோகத்திலுள்ளவர். ''அப்படியா? நீங்கள் பார்த்தீர்களா?'' என்றேன். ''பார்த்தீர்களா என்று கேட்கிறீர்களே! இந்த ஊரில் 45 தடவை பார்த்தேன். அப்புறம் சென்னைக்குப் போனபோது பிரபாத்தில் எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக அங்கே ஒரு தடவை பார்த்தேன்!'' என்றார். நான் இதை நம்பாததைக் கண்டு அவர் சத்தியம் செய்தார்! பொதுவாகத் தமிழ் நாடெங்கும் ''சகுந்தலா'' விஷயத்தில் பெது மக்களின் அபிப்பிராயம் என்னுடைய அபிப்பிராயத்தை யொட்டியே இருந்தது என்று அறிய மிகவும் திருப்தி ஏற்பட்டது.

ஆனால் சென்ற வாரத்தில் நடந்த பொன் விழாக் கொண்டாட்டத்தில் ''சகுந்தலை''யை நான் மறுபடியும் பார்த்தபோது, பழைய அபிப்பிராயத்தை ஓரளவு மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமென்று நினைத்தேன். அதாவது இந்தப் படத்துக்கு என்னுடைய பாராட்டுதல் போதாது - இன்னும் அதிகமாய்ச் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. முக்கியமாக ஸ்ரீமதி எம்.எஸ்.ஸின் நடிப்பைக் குறித்து நான் சொன்னது போதவே போதாதுதான். ''சகுந்தலா'' படத்தில் அவர் பாடியிப்பதைவிட இன்னும் எவ்வளவோ உயர்வாக இப்போது கச்சேரிகளில் அவர் பாடுகிறார். ஆனால், இந்தப் படத்தில் அவர் நடித்திருப்பதைக் காட்டிலும் சிறந்த நடிப்பை நாம் இதுவரையில் எங்குமே பார்த்தது கிடையாது. பேச்சினாலும் பாட்டினாலுங்கூட வெளிப்படுத்த முடியாத இருதய உணர்ச்சிகளையெல்லாம் முகபாவத்தினாலேயே அல்லவா வெளிப்படுத்தி விடுகிறார்? படத்தின் முதற் பகுதியில் வரும் காதல் காட்சிகளில், அவருடைய முகத்தில் வியப்பு, பயம், நாணம், இன்பம் ஆகிய உணர்ச்சிகள் மாறி மாறியும் ஏககாலத்திலும் எவ்வளவு ஆச்சர்யமாகப் பிரதிபலிக்கின்றன! ராஜ சபைக் காட்சியில், ''அடபாவி!'' என்று ஆரம்பிக்கும் போது முகத்தில் கொதிக்கும் கோபம் ஒரு கண நேரத்தில் அளவிறந்த துக்கமாக மாறிவிடும் அற்புதத்தை என்னவென்று சொல்வது? கடைசிக் காட்சியில், துஷ்யந்தன் மனம் மாறியவனாய் வரும்போது, சகுந்தலையின் உள்ளத்தில் சுயகெளரவமும் பதிபக்தியும் ஆத்திரமும் ஆனந்தமும் ரோஸமும் கருணையும் போராடுவதை அவருடைய முகபாவம் எவ்வளவு தெளிவாய்க் காட்டிவிடுகின்றது!

''சகுந்தலை'' ஒரு சிரஞ்சீவிப் படம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்தப் படத்தை ஒரு தடவையேனும் பார்த்த ரஸிகர்களின் உள்ளத்தில் அது எப்போதும் நிலை பெற்றிருக்கும் என்பது நிச்சயம்.

 
    Site by Your Webster