MS Subbulakshmi website MSS, life story, MS Subbulakshmi Photos
  About this Site  |  Contact  |  Home  
MS Subbulakshmi website MSS, life story, MS Subbulakshmi Photos
 
         
 

Articles

MS Subbulakshmi website MSS, life story, MS Subbulakshmi Photos  
 
Tribute to MSS
Upload Your Files
Saga of Steadfast Devotion - Book Release
 

புது டில்லியில் மீரா கவியரசி சரோஜினி தேவியின் வாழ்த்து

கல்கி, ஜுன் 01, 1947

வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் இங்கிலாந்துக்குப் புறப்படும் தறுவாயில் பண்டித ஜவாஹர்லால்ஜியைப் பார்த்துச் சொன்னார்: ''உங்கள் அரசியல் சிக்கல் என்னை ரொம்ப அவஸ்தைப்படுத்துகிறது. மனத்தில் நிம்மதியோ, உற்சாகமோ இல்லை. கவலை பிடுங்கி தின்கிறது!''

இவ்விதம் சொன்ன வைஸ்ராய் மவுண்ட் பேட்டனுக்கு ஜவாஹர்லால்ஜி கூறிய பதிலாவது : '' தென்னிந்தியாவிலிருந்து ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி புது தில்லிக்கு வரப்போகிறாராம். அவருடைய கானத்தைக் கேட்டால் உங்களுடைய மனச் சோர்வும் கவலையும் தீர்ந்து போகும். ஆனால் நீங்கள்தான் சீமைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே?''

வைஸ்ராய் மவுண்ட் பேட்டனுக்கும் ஜவாஹர் லால்ஜிக்கும் மேற்கண்டவாறு சம்பாஷணை நடந்ததாகப் புது டில்லி வட்டாரங்களில் சொல்லிக் கொள்ளப்படுகிறது.

இது எப்படியானாலும், ஜவாஹர்லால்ஜி வைஸ்ராய்க்குக் கூறியதாகச் சொல்லப்படும் யோசனையைத் தாம் கடைப்பிடிக்கத் தவறவில்லை. புது டில்லியில் மே மாதம் 18 ஆம் தேதியன்று நடந்த எம்.எஸ்.ஸின் கச்சேரிக்குப் பண்டித ஜவாஹர்லால்ஜி விஜயம் செய்தார். அவரோடு ராஜாஜி, சீன ஸ்தானீகர் லோசியா லூன், டாக்டர் பி.சி. ராய், ஸ்ரீ தேவதாஸ் காந்தி முதலியவர்களும் மற்றும் தென்னிந்தியப் பிரமுகர்கள் சுமார் 200 பேரும் வந்திருந்தார்கள். இந்தக் கச்சேரி லாலா ஸ்ரீராம் அவர்களின் மாளிகையில் கவியரசி சரோஜினிதேவியினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது.

***************

கச்சேரியை 'வண்டாடும் சோலை' என்னும் தமிழிசை ரீங்காரத்துடன் எம்.எஸ். ஆரம்பித்தார். பிறகு கரகரப்ரியா ராகமும் 'பக்கல நிலபடி' கீர்த்தனமும் பாடினார். இவ்வாறு கர்நாடக சங்கீதத்தின் ஸ்வரூபத்தைச் சிறிது காட்டி விட்டு, மீரா கீதங்களைப் பாடத் தொடங்கினார். 'ஹரி ஆவன்கி ஆவாஜ்' என்னும் முதல் கீதத்திலேயே ஜவாஹர்லால்ஜி பரவசமுற்று, பாட்டு முடிந்ததும் கரகோஷம் செய்தார். பிறகு ஒன்றன் பின் ஒன்றாக வந்த ஒவ்வொரு ஹிந்துஸ்தானி கீதத்தையும் சபையோர் பெரிதும் ரசித்துத் தங்கள் பாராட்டுதலைக் கரகோஷத்தின் மூலம் தெரிவித்தார்கள்.

ஹிந்தி மீராவில் வரும் 'கனசியாம ஆயாரீ' என்னும் ஹிந்தி கீதத்துக்குக் குழந்தை ராதா அபிநயத்துடன் நடனம் ஆடியபோது, சபையோர் குதூகல சிகரத்தை அடைந்தார்கள். சிலர் 'இன்னும் ஒன்று வேண்டும்' என்று கேட்டதின் பேரில் 'தாயே யசோதா' என்ற தமிழ்ப்பாட்டுக்கும் ராதா அபிநயம் பிடித்தாள். கச்சேரி முடிவில் பண்டித ஜவாஹர்லால்ஜி ராதாவைத் தம் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு குழந்தையின் நடனத் திறமையைப் பாராட்டினார். ஸ்ரீமதி எம்.எஸ்.ஸின் கானத்தை மிகவும் சிலாகித்து வாழ்த்தினார்.

*****************

ஸ்ரீ சதாசிவம் தம்பதியர் புது டில்லிக்கு வந்த காரணத்தைப் பற்றி நேயர்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.

சென்ற சில வருஷங்களாக ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பெயரும் அவருடைய சங்கீதத்தின் சிறப்பும் வட இந்தியாவில் பிரபலமடைந்து வந்திருக்கின்றன. அவருடைய கச்சேரிகளைக் கேட்டு ஆனந்தித்த வட இந்திய நண்பர்கள் பலர் தமிழ் மீரா படத்தைப் பார்த்தார்கள். அதைக் கட்டாயம் ஹிந்தி பாஷையிலும் கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

''தமிழ்ப் படத்துக்கு ஹிந்தி உருவம் கொடுத்தால் அது வடஇந்தியாவில் வெற்றி பெற முடியுமா?'' என்பது பற்றி ஸ்ரீ டி. சதாசிவம் பெரிதும் யோசனை செய்து தயங்கினார். கடைசியில் பல வட இந்திய நண்பர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தே விடுவது என்று தீர்மானித்தார். ஆறு மாத காலம் பெரு முயற்சி செய்து தமிழ் மீரா படத்தின் பாடல்களையும் சம்பாக்ஷணைகளையும் ஹிந்தி பாஷையாக்கும் பணியைப் பூர்த்தி செய்தார்.

ஹிந்தி மீரா படத்தில், குமாரி ராதாவும் ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியும் ஹிந்தி பாஷையை நன்றாகப் பயின்று தங்களுடைய பகுதிக்கு உரிய பேச்சுக்களையும் பாட்டுக்களையும் தாங்களே பேசிப் பாடியிருக்கிறார்கள். வட இந்தியர்கள் வியக்கும்படியாக ஹிந்தி பாஷையைத் தெளிவாகவும் அழகாகவும் கையாண்டிருக்கிறார்கள்.

ஹிந்தி மீராவையும் ஸ்ரீமதி எம்.எஸ். ஸையும் வட இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் கைங்கரியத்தைக் கவியரசி சரோஜினி செய்வதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். ஏற்கெனவே ஸ்ரீமதி எம்.எஸ்.ஸின் வீட்டுக்கு வந்து அவரது கானத்தைக் கேட்டு மனமகிழ்ந்து பாராட்டியவர் ஸ்ரீமதி சரோஜினி என்பதை நேயர்கள் அறிவார்கள். எனவே ஹிந்தி மீரா படத்தின் ஆரம்பத்தில் வெள்ளித் திரையிலேயே தோன்றி, மீரா படத்தைப் பற்றித் தமது அபிப்ராயத்தைத் தெரிவிக்கக் கவியரசி இசைந்தார். அவரைப் படம் எடுப்பதற்கும் அவருடைய முகவுரையை ஒலிப்பதிவு செய்வதற்குந்தான் ஸ்ரீ சதாசிவம் தம்பதியர் புது டில்லிக்கு வந்திருந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கவியரசி சரோஜினி, லாலா ஸ்ரீராம் வீட்டில் எம்.எஸ். கச்சேரியை நடத்த ஏற்பாடு செய்தார்.

*************

ஸ்ரீ சதாசிவம் தம்பதியர் புது டில்லிக்கு வந்த காரியமும் வெற்றிகரமாகப் பூர்த்தியாயிற்று. முதலில் ஹிந்தி மீரா படத்தை ஸ்ரீமதி சரோஜினி பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீமதி சரோஜினியுடன் ஸர். டி. விஜயராகவாச்சாரியார், ஸ்ரீ சந்தானம், லாலா ஸ்ரீராம், அவருடைய குடும்பத்தார், ஸ்ரீமதி ஜான் மத்தாய், ஸ்ரீமதி தேவதாஸ் காந்தி முதலிய சுமார் நூறு பேர் ஹிந்தி மீரா படத்தைப் பார்த்தார்கள். படம் முடிந்து கொட்டகையில் விளக்குப் போட்டபோது சபையின் பெரும்பாலோருடைய கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

ஸர். டி. விஜயராகவாச்சாரியார் ஸ்ரீமதி சரோஜினியைப் பார்த்து, ''இந்தியாவின் கோகிலம் என்னும் பட்டத்தை இனி நீங்கள் விட்டுக் கொடுத்து விட வேண்டியதுதான்'' என்றார். ஸ்ரீமதி சரோஜினியோ தமது பிராயத்தைக் கூட மறந்து, மானைப் போல துள்ளி வந்து, ஸ்ரீமதி சுப்புலக்ஷ்மியை அன்புடன் கட்டிக் கொண்டு ஆசி கூறினார்.

''படம் அபாரம்; கலையின் சிகரம்! இவ்வளவு உயர்வாயிருக்கும் என்று நான்கூட எதிர்பார்க்கவில்லை'' என்றார். இன்னும் ''இந்தப் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. நூறு தடவை வேண்டுமானாலும் நான் பார்க்கத் தயார்'' என்றார். மேலும் ''பாட்டு ஒரு பக்கம் இருக்கட்டும்; உங்கள் சங்கீதத்தின் உயர்வுதான் தெரிந்த விஷயமாயிற்றே? இவ்வளவு நன்றாக எப்படி நடித்தீர்கள்? இல்லை - நடிப்பு என்றே சொல்லக் கூடாது. மீராவின் வாழ்க்கையை அப்படியே தத்ரூபமாய்ப் பார்ப்பது போல் அல்லவா இருக்கிறது?'' என்று வியந்தார்.

குழந்தை ராதாவின் கன்னத்தில் தட்டி, ''இப்படியும் ஒரு குழந்தை உண்டா?'' என்று பாராட்டினார்.

படம் பார்த்தவர்களில் மற்றவர்கள் எல்லாரும், கதையில் ஒவ்வொரு கட்டமாக எடுத்துச் சொல்லிச் சொல்லி வியந்தார்கள்.

மறுநாள் ஸ்ரீமதி சரோஜினியின் பூர்வாங்கப் பிரசங்கத்தை ஒலிப்பதிவு செய்து படமும் எடுக்கப்பட்டது. கவியரசி இதற்காக முன்னால் எழுதித் தயார் செய்து கொண்டு வந்து பேசவில்லை. அந்தச் சமயம் தன் மனத்தில் தோன்றியதையே பேசினார். அவருடைய ஆங்கிப் பேச்சின் மொழி பெயர்ப்பு வருமாறு :

''தென்னிந்தியாவின் சுப்புலக்ஷ்மியை வட இந்தியாவின் மக்களுக்கு அறிமுகப்படுத்த முன் வந்திருக்கிறேன். அவருடைய தமிழ் மீரா படத்தை வட இந்தியாவுக்காக ஹிந்தி பாஷையில் ஆக்கி, வட இந்தியாவுக்கு அவர் அளித்திருக்கிறார். வட இந்தியாவுக்கு மீராவிடம் விசேஷ உரிமை உண்டு என்றாலும், மீரா உலகத்துக்கெல்லாமே சொந்தந்தான். எம்.எஸ். சுப்புலக்ஷ்மியைப் பற்றி வட இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். ஆகையினாலே தான் ஆங்கிலத்தில் பேசுகிறேன்.

''இந்தியாவின் சின்னஞ்சிறு குழந்தை கூட சுப்புலக்ஷ்மியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கும். அவருடைய குரல் இனிமையைப் பற்றியும், அவருடைய தர்ம கைங்கரியங்களின் சிறப்பைப் பற்றியும் அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆயினும் வட இந்திய மக்கள் அவரை இன்னமும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் தலைசிறந்த கலைவாணிகளில் ஒருவர் சுப்புலக்ஷ்மி என்பதை உணர்ந்து, அன்புடன் போற்றிக் கெளரவிக்க வேண்டும். மீராவின் கதை இந்தியாவின் கதையாகும்; இந்தியாவின் பக்தி மகிமை, ஆத்ம சமர்ப்பணத்தின் பெருமை இவற்றின் கதையாகும். மன்னர் குலத்திலுதித்த கவியரசி மீராவுக்கு உலக சரித்திரத்தில் உவமை சொல்லக் கூடியவர் வேறு யாரும் இல்லை. தெரிஸா, ஸிஸிலியா முதலிய கிறித்துவ பக்த சிரோமணிகள் ஏசு கிறிஸ்துவின் பூரண அருளைப் பெற்றவர்கள். ஆனால் மீராவோ தான் பிரேமை கொண்ட கண்ணனோடு இரண்டறக் கலந்து ஐக்கியமாகி விட்டவள். சுப்புலக்ஷ்மி இந்தப் படத்தில் மீராவாக நடித்திருக்கிறார் என்பது அவ்வளவு பொருத்தமில்லை. மீரா கீதங்களை அவர் பாடும்போது, மீராவே புத்துயிர் பெற்று வந்து நம் முன்னால் பாடுகிறார் என்றே நம்பத் தோன்றுகிறது. சுப்புலக்ஷ்மியின் அற்புதமான கானத்தைக் கேட்பவர்கள் யாரானாலும், இந்தத் தலைசிறந்த கலைவாணியின் உணர்ச்சியூட்டும் முகபாவங்களைப் பார்ப்பவர் யாரானாலும், அவர்கள் தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்து மெய்மறந்து விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. சுப்புலக்ஷ்மி மீராவாக நடிக்கிறார் என்ற எண்ணமேயாருக்கும் தோன்றாது. அவரே மீரா என்றுதான் எண்ணத் தோன்றும்.

''இந்த காலத்து பாரத சந்ததியிலே இத்தகைய இணையில்லாத கலைவாணி தோன்றியிருப்பது பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை.''

*********

மீரா யாத்திரை

கவியரசி சரோஜினி இப்படிப்பட்ட இணையில்லாத பாராட்டு மொழிகளை ஆங்கில பாஷையில் கவிதாரஸத்துடன் அள்ளிக் கொட்டியிருக்கிறார். ஹிந்தி மீரா படத்தைப் பார்ப்பவர்கள் கவியரசியையும் திரையில் பார்க்கலாம்; அவருடைய இனிய சொற் பிரவாகத்தைக் கேட்கலாம்.

இத்தனை நாளும் சங்கீதம் முதலிய கலைத் துறைகளில் வட இந்தியாவில் பிரபலமடைந்த தென்னிந்தியர்கள் அதிகம் பேரில்லை. இப்போது ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி தென்னிந்தியாவின் கலைச் சிறப்பை வட இந்தியாவில் நிலைநாட்டிக் கொண்டு வருகிறார். ஹிந்தி மீராவின் மூலமாக தென்னிந்தியாவின் கலைச் சிறப்பு வட இந்தியாவில் என்றுமில்லாத புகழை அடையும் என்று எதிர்பார்க்கலாம்.

 
    Site by Your Webster