MS Subbulakshmi website MSS, life story, MS Subbulakshmi Photos
  About this Site  |  Contact  |  Home  
MS Subbulakshmi website MSS, life story, MS Subbulakshmi Photos
 
         
 

Tributes

MS Subbulakshmi website MSS, life story, MS Subbulakshmi Photos  
 

Homage

Tributes from Artists

Tribute to MSS
Upload Your Files
Saga of Steadfast Devotion - Book Release
 

எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சகாப்தத்தின் முடிவு

தென்றல், ஜனவ, 2005

தகவல் : ஹிரிகேசநல்லூர் வெங்கட்ராமன்
தொகுப்பு : கேடிஸ்ரீ

Tribute by Harikesanallur Venkatraman - Thenral'பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்' என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக்கூடலிலே தோன்றி எட்டுத் திக்கும் தமிழோசை பரவச் செய்த இசை இமயம் டிசம்பர் மாதம் 12ம் தேதி அதிகாலையில் உலகை விட்டு நீங்கியது.

கடும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.

தேனினும் இனிய காந்தக் குரலால் கோடானுகோடி ரசிகப்பெருமக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்ற நாதஜோதி அணைந்துவிட்டது. இசைவானிலும், திரைவானிலும் சுடர்விட்டுப் பிரகாசித்த அந்த ஒளி இனி ஒலிவடிவில்தான் உலா வரும்.

ராகம், தானம், பல்லவி எல்லோரும் பாடுவார்கள். ஆனால் ராகம் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூகசேவைக்கும் கொடுத்த ஒரே இசைக்கலைஞர் எம்எஸ். சுப்புலட்சுமிதான். இதற்காகத்தான் இவருக்கு மாக்சேசே விருது தரப்பட்டது.

1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் சண்முக வடிவு அம்மாளுக்கும் சுப்பிரமணிய அய்யருக்கும் மகளாகத் தோன்றியவர் எம்.எஸ். தாயார் புகழ்பெற்ற வீணைக் கலைஞர். எம்.எஸ்.ஸின் முதல் குரு அவர்தான். ஆரம்ப காலத்தில் அம்மாவின் வீணைக் கச்சேரிகளில் பாடி வந்தார் எம்.எஸ். 1926ல் வெளியிடப்பட்ட ஒரு எல்.வி. இசைத்தட்டில் 'மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்னும் பாடலில் சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டும் இணைந்து வெளிவந்தது. தி ட்வின் ரிகார்டிங் கம்பெனி இதை வெளியிட்டது. இதுதான் இவரது முதல் இசைத்தட்டு.

எம்.எஸ்.ஸிற்கு சக்திவேல் பிள்ளை என்ற அண்ணனும், வடிவாம்பாள் என்று ஒரு தங்கையும் இருந்தனர். மதுரை சக்திவேல் பிள்ளை ஒரு மிருதங்கக் கலைஞர். தங்கை எம்.எஸ்.ஸின் கச்சேரிகளுக்குப் பலமுறை இவர் மிருதங்கம் வாசித்திருக்கிறார்.

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை மிருதங்கத்தில் ஜாம்பவான். எம்.எஸ்.ஸின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் அவரும் ஒருவர். 1935ல் தட்சிணாமூர்த்தி அவர்களின் மணிவிழாவில் எம்.எஸ்.ஸின் கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிதான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது எம்.எஸ்.ஸுக்கு.

அதே ஆண்டு மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன், எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியது அவரது மிகச் சிறந்த கச்சேரிகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது. இதன் பிறகுதான் தென்னிந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் எம்.எஸ்.ஸிற்கு அழைப்பு வரத் தொடங்கிற்று.

அரங்கேற்றம்

மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்தார். வாசிப்பை திடீர் என நிறுத்திவிட்டு அருகில் இருந்த தனது மகள் 10 வயது சிறுமி சுப்புலட்சுமியை அழைத்தார் அம்மா சண்முகவடிவு ('குஞ்சம்மாள்' என்று அழைப்பார் அவர்) அருகில் மகளை அழைத்த அம்மா ''குஞ்சம்மாள் நீ பாடு'' என்று சொல்ல, உடனே சிறுமி குஞ்சம்மாள் மேடைக்கு விரைந்து வந்து ஹிந்துஸ்தானி மெட்டில் அமைந்திருந்த 'ஆனந்த ஜா' என்னும் மராட்டிப் பாடலைச் சிறிதும் அச்சமின்றிப் பாடி வந்திருந்தோரின் பாராட்டைப் பெற்றார். இதுதான் இவரின் முதல் இசைக்கச்சேரி. அன்று எம்.எஸ்.ஸின் அரங்கேற்றம் நடைபெற்றபோது அப்பள்ளியில் அப்போது ஆசிரியராக பணிபுரிந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இளைய சகோதரர் ஸ்ரீனிவாசனும் அங்கிருந்தார்.

இசை ஆசிரியர்கள்

அம்மாவைத் தொடர்ந்து சேத்தூர் சுந்தரேச பட்டர் என்பவரிடம் பல வருடங்கள் இசை பயின்றார் எம்.எஸ். திருமணத்திற்குப் பிறகு செம்மங்குடி சீனிவாச அய்யர். எம்.எஸ்.ஸின் பிரதான குருவாக திகழ்ந்தார். கடையநல்லூர் வெங்கட்ராமன் அவரது கடைசி குரு. அன்னமாச்சரியா கீர்த்தனங்களை டி. பசுபதி, நேதநூரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் கற்றுக் கொண்டார். தோடி ராக ஆலாபனை மட்டும் டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையைக் கேட்டுக் கற்றுக் கொண்டார். அதுபோல் முத்துசாமி தீட்சதரின் கீர்த்தனைகளை உச்சநீதிமன்ற நீதிபதி டி.எல். வெங்கட்ராம ஐயரிடம் கற்றுக் கொண்டார். பாபநாசம் சிவனும், மைசூர் வாசுதேவாச்சாரும் தாங்கள் இயற்றிய பாடல்களைத் தாங்களே எம்.எஸ்.ஸுக்கு கற்றுக் கொடுத்தனர்.

வெள்ளித் திரைத் தாரகை

இயக்குநர் கே. சுப்பிரமணியம் (பிரபல நாட்டியமணி பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) அவர்களின் 'சேவா சதனம்' என்னும் திரைப்படத்தில் முதன்முதலில் பாடி நடித்தார் எம்.எஸ். 1938ல் இப்படம் வெளியானது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'சகுந்தலை' என்னும் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். மிகப்பெரிய வெற்றிப் படமான இதை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கினார்.

1941ல் வெளியான 'சாவித்திரி' என்கிற படத்தில் எம்.எஸ். நாரதராக நடித்ததும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்பு 1945ஆம் ஆண்டில் தீபாவளியன்று வெளியானது 'மீரா'. மீரா படத்தையும் சகுந்தலை படத்தைத் தயாரித்த நிறுவனமே தயாரித்தது. இப்படத்தில் எம்.எஸ். பாடிய அனைத்துப் பாடல்களும் பெரிய வெற்றி பெற்றன. 'காற்றினிலே வரும் கீதம்...' கேட்டவர்களை உருக வைத்தது. படத்திற்கான வசனத்தை எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியும், பாடல்களைப் பாபநாசம் சிவனும் எழுதியிருக்கிறார்.

மீரா இந்தியில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆரும், எம்.எஸ். சுப்புலட்சுமியும் சேர்ந்து நடித்த ஒரே படம் மீரா ஆகும். அதுமட்டுமல்ல, மீராதான் எம்.எஸ். நடித்த கடைசிப்படமும்கூட.

திருமணம்

'சேவா சதனம்' படப்பிடிப்பு கிண்டியில் ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு அடிக்கடி வருவார் டி.எஸ். சதாசிவம். எம்.எஸ்.- சதாசிவம் சந்திப்பு இங்கே தொடங்கி, திருமணத்தில் முடிந்தது. 1940ல் சென்னையிலுள்ள திருநீர்மலை கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

கல்கியின் விமர்சனம்

அக்காலத்தில் ஒரு திரைப்படத்தைப் பற்றி கல்கி அவர்கள் பாராட்டி விமர்சனம் எழுதினால் அந்தப் படம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். அவரது எழுத்துக்களுக்கு மகத்தான சக்தி இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் சத்தியாகிரகம் செய்து கல்கி மாயவரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனந்தவிகடன் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக அப்பேது கல்கி பணியாற்றி வந்தார். மாயவரம் சிறையிலிருந்த ஜாமீனில் வெளிவந்த கல்கியை அழைத்துச் சென்று 'சகுந்தலை' படத்தைப் பார்க்க சதாசிவம் ஏற்பாடு செய்தார். அந்தப் படத்திற்கான விமர்சனத்தைக் கல்கி எழுதினார். அது எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் ஒரு படிக்கல்லாக அமைந்தது முக்கியமானது.

தமிழ் இசைவளர்ச்சியில் எம்.எஸ்.ஸின் பங்கு

ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ராஜா சர். அண்ணாமலை செட்டியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர். கே. சண்முகம் செட்டியார் போன்றோரால் தொடங்கப்பட்ட தமிழ் இசை இயக்கத்திற்குப் பக்கபலமாக நின்றவர்கள் சுப்புலட்சுமி - சதாசிவம் தம்பதியினர்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார், ராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற எண்ணற்ற அருளாளர்களின் தமிழ்ப் பாடல்களை மேடைதோறும் பாடி, ரசிகர்கள் மனதில் பதியவைத்த பெருமை எம்.எஸ். சுப்புலட்சுமியைச் சாரும்.

சென்னை தமிழ் இசைச் சங்கம், எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு 'இசைப் பேரறிஞர்' பட்டம் சூட்டி கெளரவித்தது. இவர் பாடிப் பிரபலமடைந்த தமிழ்ப் பாடல்களுள் 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்', 'குறையொன்றுமில்லை', 'நீ இறங்கா எனில் புகலேது', 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா', 'வாழிய செந்தமிழ்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஐக்கிய நாடுகளில் பாடிய குயில்

1966ஆம் ஆண்டு அக்டோ பர் 23ம் தேதி ஐ.நா. சபையில் எம்.எஸ் பாடினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய 'மே தி லார்ட் பர்கிவ் அவர்சின்ஸ்' என்னும் ஆங்கிலப் பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி ஐ.நா. சபையில் பாடினார். இப்பாடலுக்கு ஹாண்டல் மேனுபல் இசையமைத்துள்ளார்.

காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஐ.நா. நிகழ்ச்சிக்காகப் பிரத்யேகமாக இயற்றிய 'மைத்ரீம் பஜத' என்ற உலக நன்மைக்கான பிரார்த்தனை ஸ்லோகத்தையும் எம்.எஸ். பாடினார். அந்நிகழ்ச்சிக்கு வி.வி. சுப்ரமணியம் வயலின், டி.கே. மூர்த்தி மிருதங்கம், டி.எம். வினாயகராம் கடம் வாசித்தனர்.

மகாத்மா காந்தி முதல் அப்துல் கலாம் வரை அத்தனை தேசத்தலைவர்களும் எம்.எஸ். அவர்களின் ரசிகர்கள்.

மகாத்மா காந்தியின் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு பலமுறை பஜனைப் பாடல்களை எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியுள்ளார். இன்றைக்கும் அகில இந்திய வானொலியில் காந்தி அஞ்சலிக்கு முன்னால் ஒலிக்கும் 'வைஷ்ணவ ஜனதே' மற்றும் 'ரகுபதி ராகவ ராஜாராம்' போன்ற மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடல்கள் எம்.எஸ். அவர்களால் பாடப்பட்டவையே.

சுப்ரபாதம்

வேங்கடேச சுப்ரபாதம் திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப்படுகிறது. இறைவனைத் துயில் எழுப்பும் இந்த தெய்வீகப் பாடலை 'பிரதிவாதி பயங்கரம்' அண்ணங்கராச்சாரியார் என்னும் வைணவப் பெரியவரின் குரலில்தான் திருப்பதி கோயிலில் ஒலிபரப்பி வந்தனர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய வேங்கடேச சுப்ரபாதம், ஆதிசங்கரரின் பஜகோவிந்தம், முத்துசாமி தீட்சதரின் 'ரங்கபுர விஹாரா' என்னும் கீர்த்தனை ஆகியவற்றை எச்.எம்.வி. நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்ட போது அது உலக அளவில் பிரபலமாயிற்று.

முதலில் எம்.எஸ்.ஸின் சுப்ரபாதத்தை அங்கீகரிக்காமல் இருந்த திருப்பதி தேவஸ்தானம், 1975லிருந்து இதனை ஒலிபரப்ப ஆரம்பித்தது.

கணவரின் மறைவு

1997ம் ஆண்டு நவம்பர் மாதம் சதாசிவம் மரணம் அடைந்தார். அதன்பிறகு எம்.எஸ். கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்டார். கடந்த ஏழு வருடங்களாக அவர் மேடைக் கச்சேரிகள் செய்யவில்லை. 2002ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாதெமி இவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கியது. உடல்நல குறைவால் அவ்விரதை எம்.எஸ். நேரே சென்று பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் எம்.எஸ். அவர்களின் வீட்டிற்கே நேரிடையாகச் சென்று விருதை அவருக்கு அளித்து கெளரவப்படுத்தினார்.

1997ம் ஆண்டு ஜுன் மாதம் சென்னை மியூசிக் அகாதெமியில் எம்.எஸ். பாடினார். அதுதான் அவர் கடைசியாகப் பாடிய கச்சேரி!

அவரது குரலும், இனிய இசையும் இந்தப் பார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் நிலைத்து நிற்கும் அமரத்துவம் பெற்றவை என்பதில் ஐயமில்லை!

இந்திய மொழிகள் அத்தனையிலும் இவர் பாடியுள்ளார் என்பதும் ஒரு சரித்திரம். இதற்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை.

செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்று மகாகவி பாரதி பாரதமாதாவிற்குப் பாடினானே, அந்த வரிகள் எம்.எஸ்ஸுக்கும் பொருந்தும் அல்லவா!

 
    Site by Your Webster