கல்கி, செப் 12, 1990
“நீங்கள் பாடகர் ஆனது எப்படி?” என்று லதா மங்கேஷ்கரை ஒருமுறை கேட்டார்கள். “எனக்குப் பேசத் தெரியாது; அதனால் பாடுகிறேன்” என்றார் லதா. ஆனால், அண்மையில் தமக்கு மிக அழகாகப் பேசவும் தெரியும் என்பதை நிரூபித்தார் லதா மங்கேஷ்கர்.
சங்கர நேத்ராலயா நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்காக எம்.எஸ். நான்காவது முறையாக வழங்கிய இசை நிகழ்ச்சி, சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற்றது. அந் நிகழ்ச்சியில் எம்.எஸ். பற்றிய பாராட்டுரை நிகழ்த்துவதற்காக வந்திருந்த லதா கையில் ஒரு சிறு குறிப்பு கூட இல்லாமல் நேர்த்தியாகப் பேசினார்.
”இளம் வயதிலேயே நான் சுபலக்ஷ்மி ஜீயின் விசிறியானேன். மீரா படத்தில் அவர் பாடி, நடித்தத்தைக் கண்ட நான் மீரா பக்தையானேன். அன்று முதல் எனக்கு சுபலக்ஷ்மிஜி மீது ஏற்பட்ட பக்தி கலந்த மரியாதை இதுநாள் வரை தொடர்ந்திருக்கிறது. வளர்ந்திருக்கிறது.
”நான் வணங்கிப் போற்றும் சுபலக்ஷ்மிஜியின் அண்மையில் நான் மிகவும் சிறியவள். அவர் இசையில் – பாடும் ஒவ்வொரு பாடலிலும் – தெய்வீகம் இருக்கிறது; அவை ஒவ்வொன்றும் இறைவனுக்கே அர்ப்பணம் ஆகின்றன. அந்த உயரிய இசை அவருக்குப் பெற்றுத் தரும் செல்வத்தின் பெரும் பகுதியை அவர் மானுடத்தின் மேன்மைக்கும் நன்மைக்கும் அர்ப்பணம் செய்து வருகிறார். இந்திய மக்களின் நன்மைக்காக இசை வேள்வி நடத்தும் ஒரு தபஸ்வினியைப் போல ஒளிர்கிறார்!
”வயதாகிவிட்டது, சோர்வாக உள்ளது, உடல்நலக் குறைவு” என்றெல்லாம் கூறினால் கூட சுபலக்ஷ்மிஜி மேடையேறிப் பாட ஆரம்பித்தால் அவை எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகின்றன. அற்புதமான இசை மட்டுமே அங்கே பிரத்யட்சமாகிறது. சரஸ்வதி தேவியின் பூரணமான அருள்பார்வை அவர் பேரில் இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது.
”இவ்வளவு பெரிய வித்வாம்ஸினியைப் பற்றிச் சிறியவளான நான் என்ன சொல்ல முடியும்…? அவர் நூற்றாண்டுகள் வாழ்ந்து, தமது இசை வேள்வியைத் தொடர வேண்டும். நாம் எல்லோரும் அதனால் பயன்பெற வேண்டும் – இதையே நான் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.”
ஓர் அற்புதமான கச்சேரியைக் கேட்டதோடு, இசையுலகின் இரு சிகரங்களையும் ஒருசேரக் காணும் பாக்கியம் அன்று எம்.எஸ். கச்சேரிக்கு வந்திருந்தவர்களுக்குக் கிடைத்தது. அந்த பாக்கியத்தைக் கல்கி வாசகர்கள் அனைவருக்குமே இவ்விதழ் மேலட்டை மூலம் கிடைக்கச் செய்திருக்கிறோம்.