கீதா ராமநாதன் பென்னெட், தென்றல், ஜனவ, 2005
என் தந்தை ராமநாதன் எம்.எஸ். அம்மாவின் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர் என்பதால் எனக்கு எம்.எஸ்ஸைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அவர்கள் வீட்டில் எனக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. அங்கிருந்த எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியான பூப்போட்ட எளிய பருத்திப் புடவைகளையே அணிந்திருந்தார்கள். அதைவிட என்னை அதிரச் செய்தது என்னவென்றால், எங்களுக்குக் குளிர்பானம் கொண்டுவந்த பணிப்பெண்ணும் அதே புடவையை அணிந்திருந்ததுதான்.
எங்கள் திருமணத்திற்குப் பின் என்னையும் ஃபிரான்க்நயும் அப்பா எம்.எஸ். அம்மாவின் வீட்டில் சிலர் முன்னிலையில் வீணை வாசிக்கச் சொன்னார். நாங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போதே பலர் எழுந்து சாப்பிடப் போயினர். ஆனால் எம்.எஸ். எங்கள் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார். நாங்கள் வாசித்து முடிக்கும் வரை நகரவில்லை. அவருடைய இசை ஆர்வத்தை மட்டுமல்ல, அவரது பிறர் மேலான அக்கறையையும் இது காண்பித்தது. அன்றைக்குத்தான் அவர் வீணை வாசித்துக் கேட்டேன். மிக நுணுக்கமாகவும், இனிமையாகவும் இருந்தது.
என் தங்கை சுகன்யாவின் கணவர் ரகு எச்.எம்.வி. நிறுவனத்தில் ஒலிப்பதிவுப் பொறியாளராக இருந்தார். எப்போது எம்.எஸ்ஸின் பாடல் பதிவு அங்கே நடந்தாலும் அம்மாவின் வீட்டிலிருந்து அங்கிருக்கும் எல்லோருக்குமே சாப்பாடு வந்துவிடும்.
இந்தக் கச்சேரி சீசனில் எங்கே போனாலும் ‘குறையொன்றும் இல்லை’ அல்லது ‘பாவயாமி கோபால பாலம்’ ஒலிக்கிறது. ஒவ்வொரு கச்சேரியுமே அவருக்குச் சமர்ப்பிக்கும் அஞ்சலிதான்.