ஸ்ருதி கீர்த்தி, கல்கி, நவம் 22, 1998
மனைவியின் கைகளைப் பிடித்தபடி சதாசிவம் உயிர்நீத்து ஒரு வருடமாகி விட்டது (நவம்பர் 21). இணைபிரியாதவர்களையும் பிரிக்கும் வல்லமை இயற்கைக்கு உண்டு எனில் அந்தப் பிரிவுத் துயரைத் தாங்கும் சக்தியையும் இறைவன் அருள்கிறான். தமது நினைவுப் பெட்டகத்தைத் திறந்து சில அனுபவத் துளிகளை இதோ பகிர்ந்து கொள்கிறார் ஐம்பத்தேழு ஆண்டுகள் சதாசிவத்துடன் இல்லறம் நடத்திய எம்.எஸ்
அவரைப் போல உயர்ந்த ரசனை உடையவர்கள் இருக்க முடியாது. சங்கீதம் மட்டுமில்லை, எல்லா விஷயங்களிலேயும் அந்த ரசனை தெரியும். தோட்டத்தில் எந்தெந்தப் பூச்செடிகளை எங்கெங்கே விதைக்கணும்னு சொல்லுவார். எதெது எப்போ முளை விடும், எத்தனை நாள் கழித்து மலர ஆரம்பிக்கும்னு கணக்கு வைச்சுப்பார். பூக்க ஆரம்பித்ததும் பார்த்தால் அந்தந்தப் பாத்திகளின் நிறங்கள் மாறி மாறி அமைஞ்சு அசாத்திய அழகாகத் தெரியும்… பார்த்துப் பார்த்து மகிழ்ந்து போவார்.
வண்ணங்களை இவ்வளவு இரசித்தாலும் அவர் விரும்பி அணிந்தது வெள்ளை மட்டும்தான் – கதர்! அதுவும் அப்படியே துல்லியமா இருக்கணும். பிரயாணங்களின் போது, அவருடைய பெண்கள் துணிகளை மடித்து பெட்டியில் அழகாக அடுக்கிக் கொடுத்தால் அதைக்கூட இரசித்துப் பாராட்டுவார். புது இடங்களில் முக்கியமான கச்சேரிகள் நடக்கும்போது மேடையில் பின்புறம் எந்த நிறத்தில் திரைசசீலை போட்டிருக்கிறதுன்னு விசாரிக்கச் சொல்லுவார். அதற்கு ஒத்துப் போகிற மாதிரி புடைவை நிறம் தேர்ந்தெடுக்கச் சொல்லுவார்.
சாப்பாட்டிலும் அதே போன்ற ரசனைதான். இனிப்பு வகைகள் இஷ்டப்பட்டுக் கேட்டுச் சாப்பிடுவார். சின்ன வயதில் நன்றாகச் சாப்பிட்டார். வயது செல்லச் செல்ல உணவின் அளவைக் குறைத்துக் கொண்டு, வேளை தவறாமல் சாப்பிட்டார். கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் நல்ல ருசியுடன் சமையல் இருக்க வேண்டும். கத்திரிக்காய், வாழைக்காய் போல நாட்டுக் காய்கள் நன்றாக வெந்து குழைந்து இருக்க வேண்டும்.
சங்கீதத்தை அவர் எவ்வளவு ரசித்தார் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். அவர் பாரதியார் பாடல்களை வீதியெல்லாம் பாடிக் கொண்டு போனதை நான் கேட்டதில்லை. ஆனால், வீட்டிலே பேரக் குழந்தைகளுக்காக அவர் பாடிக் கேட்டிருக்கிறேன். ‘காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே..’ என்றோ ‘தீம்தரிகிட! தீம்தரிகிட!’ என்றோ பாடினால், ஏதோ இடி முழங்குவது மாதிரி இருக்கும். அதே ‘வெள்ளை நிறத்தொரு பூனை’ என்று பாட ஆரம்பித்தால் ஒரே சாத்வீகமகாகக் குரல் மாறிப் போகும்.
ஒரு காலத்தில் நிறைய வெற்றிலை, பாக்கு புகையிலை போட்டு வந்தார். வீட்டிலேயே புகையிலை பதம் செய்து கொடுத்ததுண்டு. பாக்கையும் வாங்கி, பன்னீரில் ஊறவைத்து, இடித்து; லவங்கம், ஏலம் பொடி செய்து சேர்த்து குங்குமப்பூவைப் பரப்பி, சுடச் சுட நெய் காய்ச்சி அதன் மேல் ஊற்றி… ரொம்ப பக்குவமாகச் செய்து கொடுப்போம். ராஜாஜி கேட்டுக் கொண்டதன் பேரில் ஒரே நாளில் புகையிலைப் பழக்கத்தைக் கைவிட்டார்!
ரொம்ப வைராக்கியம் உண்டு அவருக்கு… எவ்வளவுக்கெவ்வளவு ரசித்து, ருசித்துச் சாப்பிடுவாரோ அதே தீவிரத்தோடு உபவாஸமும் இருப்பார். – சில சமயம் கோபத்தினால் சாப்பிடாமல் இருந்ததும் உண்டு.
இவருடைய கோபம் பற்றி உலகமே ஆச்சர்யப்படும். ஆனால் அவர் மனம் ஸ்படிகம் மாதிரி. கோபத்துக்குக் காரணம் ரொம்ப நியாயமானதாகயிருக்கும்; அந்தக் கோபம் வந்த சுவடு தெரியாமல் ஓடியும் போய்விடும்.
யோசித்துப் பார்த்தால் அந்தக் கோபம் பெரும்பாலும் மற்றவர்கள் பேரில் அவர் கொண்டிருந்த அக்கறையினாலே ஏற்பட்ட கோபமாகவே இருக்கும். நாங்கள் குடித்தனம் வைத்த புதிது. அவருடைய தங்கை காலமாகிவிட, அந்தத் தங்கையின் இரண்டு குழந்தைகள் அம்பி, தங்கம் எங்களிடம்தான் வளர்ந்தார்கள். கூட்டுக் குடும்பம். வீட்டிலே பெரியவர்கள் அம்பியைக் கடைத்தெருவுக்கு அனுப்பிவிட்டார்கள். குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாய் வளர்த்து ஆளாக்குவதாக தங்கைக்கு வாக்குக் கொடுத்திருந்தார். அப்படியிருக்கும் போது சின்னஞ் சிறுவனை கடைத்தெருவுக்கு அனுப்பினால் அவருக்குப் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால் வீட்டில் மற்ற பெரியவர்களை எதிர்க்க முடியவில்லை. வெளியே போயிருந்த இவர், திரும்பி வந்து அம்பியைக் காணாமல், விஷயம் அறிந்ததும் ரொம்பக் கடுமையாகக் கோபித்துக் கொண்டு விட்டார்.
கோபித்து முடிப்பதற்குள் அம்பி திரும்பி வந்துவிட்டான். அந்தக் கோபம் அப்படியே சந்தோஷமாக மாறிவிட்டது. எவ்வளவு கோபமோ அவ்வளவு சந்தோஷம்!
அதே போல் உடன் பயணம் செய்கிறவர்கள் – நண்பர்களானாலும் சரி, பக்க வாத்தியக் கலைஞர்களானாலும் சரி, சமமான கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அதில் ஏதேனும் குறை ஏற்பட்டால் ரொம்பக் கடுமையாகக் கோபித்துக் கொள்ளுவார்.
போகப் போக கோபமெல்லாம் மறைந்து அடங்கி ஒரு வேதாந்தியைப் போல் ஆகிவிட்டார்.
கல்கி காரியாலயத்தின் ஊழியர்களிடமும் அவருக்கு அளவிடமுடியாத அன்பு. அவர்கள் எந்தக் குறைவுமில்லாமல் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். சில ஆண்டுகள் வரை தீபாவளியன்று வீட்டிலேயே ஊழியர்கள் எல்லோருக்கும் விருந்து நடத்தினோம். பாயசமும் நெய்யும் மட்டும் நானே என் கையால் பரிமாற வேண்டும் என்பார். நெய் பரிமாற பெரிய கரண்டிதான் உபயோகிக்க வேண்டும்! பரிமாறிக் கொண்டே வரும் போது பின்னோடு நடந்து வந்து எல்லோரையும் பந்தி விசாரித்து மகிழ்ந்து போவார்.
அதே போல் நண்பர்களிடமும் ஆழ்ந்த பாசம். சீட்டு விளையாட பிற்பகலில் நண்பர்கள் வருவார்கள் – சீட்டு என்றால் பொழுதுபோக்குத்தான் – கை விளையாடும் ; மனமென்னவோ தீவிரமாக வேறு யோசனையிலே இருக்கும். அதே சமயத்தில் வருகிற நண்பர்களை உபசரித்து கவனிப்பதில் குறையே இருக்காது. யார் யாருக்கு என்ன டிபன் பிடிக்குமோ அதைச் செய்து தரச் சொல்லி மகிழ்ச்சி கொள்ளுவார்.
காங்கிரஸில் ரொம்பத் தீவிர ஈடுபாடு இருந்ததால் தெய்வ வழிபாட்டிலே இவருக்கு நாட்டம் இல்லாமல் போய்விடுமோ என்று ஒரு சமயம் நான் நினைத்ததுண்டு. ஆனால் திருப்பதி பெருமாளிடம் மாறாத பக்தி. காஞ்சி முனிவர், பாபா இருவரும் இரண்டு கண்கள்! எத்தனை வேலை இருந்தாலும் கல்கி அலுவலகத்தில் ஆயுத பூஜை ரொம்ப விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்வார். அன்றைய தினம் ‘நெஞ்சுக்கு நீத..’ ‘ வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்’ என்று இரண்டு பாரதியார் பாடல்களும் பாடுவேன்.
சுதந்தரம் அடைந்த பிறகு சில ஆண்டுகள் வரை சுதந்தர தினத்தன்று ஃபோர்மேன் ராஜாபாதரைக் கொடியேற்றச் செய்து ‘தாயின் மணிக்கொடி’ பாடச் செய்தார்.
வாழ்க்கை முழுவதும் பிறருக்காக – பரோபகாரமாக வாழ்ந்தார். அதனால்தான் சராசரி குடும்பக் பெண்ணாக மணவாழ்க்கை தொடங்கிய என்னை ஒருநாள் அழைத்து , “நீ பாடணும்… தர்மத்துக்காகப் பாடணும்” என்றார். அவர் விருப்பப்படியே நடந்தது.
ஒரு சமயம் டெல்லியில் கச்சேரி – அது யுத்த காலம். மேடைக்கு ஒரு சீட்டு எழுதி அனுப்பினார். ‘கச்சேரியின் இடையே ஒருவர் பேசுவார். அவர் பேசி முடிந்ததும் கை வளையல்களைக் கழற்றி நீ அவரிடம் தர வேண்டும்..” என்று எழுதியிருந்தார். நானும் அப்படியே செய்தேன். அவருடைய சஷ்டியப்த பூர்த்திக்குக் குழந்தைகள் சேர்ந்து அன்பளிப்பாகக் கொடுத்த வளையல்கள்!
யுத்த நிதிக்கான கச்சேரிதான் அது. அதன் இடையிலே நிதிக்காக வேண்டுகோள் விடுத்தபோது நாம் முன்னோடியாக வழி காட்ட வேண்டும் என்று விரும்பினார். நாம் ஆரம்பித்து வைத்தால், பலர் பின்தொடர்வார்கள் என்ற நல்லெண்ணம்…
சரீரத்தாலும் சிந்தனையாலும் பொருளாலும் உதவிகள் செய்த பரோபகாரி அவர்.
கடைசிக் காலத்தில் தினமும் காலையில் டேப்ரிகார்டரில் வேதம் கேட்பார்; ஐபம் செய்வார். நான் ஒலிப்பதிவு செய்த சுலோகங்களையோ பாட்டுக்களையோ கேட்டபடி நாற்பது நிமிடங்கள் நடப்பார். நகைச்சுவை உணர்வை இழக்காமலே இறுதிவரை வாழ்ந்தார். நிறைவான, உயர்ந்த வாழ்க்கை – அந்த நிறைவின் பலத்தில்தான் நான் இன்று இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது. அவரால் வளர்ந்து பயனடைந்த ஆயிரமாயிரம் பேருக்கும்கூட அப்படித்தான் தோன்றும் போலிருக்கிறது.