தினமலர், டிசம் 12, 2004

இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியிருக்கிறது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம் என்று புகழ்பெற்ற கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார். இந்தியாவின் அந்த மாபெரும் கலைஞருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’வும் வழங்கப்பட்டது.

1940லிருந்து இவர், பொதுவாக இசைத் துறைக்கான இந்தியாவின் உயர் விருதுகள் அனைத்தையும் பெற்றிருந்தார்.

1915 செப்டம்பர் 16ல் மதுரை வீணை இசைக் கலைஞர் சண்முகவடிவுக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலிலே வளர்ந்தார். இவருடைய தாயார் சண்முகவடிவு போல் வடிவாம்பாளும் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிகுந்தவர். சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். சுப்புலட்சுமியின் பாட்டி அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர்.

இசைக் குடும்பம்

இசைப் பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன் பல கச்சேரியிலும் இவர் பங்கேற்றதுண்டு. செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்திய நாத பாகவதர், ராஜமாணிக்கம் பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை, பாலக்காடு மணி ஐயர், ஜி.என். பாலசுப்ரமணியன் போன்ற ஜாம்பவான்கள் இடம்பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் ரசித்ததும் உண்டு. இவரது தாயாருடன் கச்சேரிக்கு சென்றபோது பெரிய கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல்வளத்தை வாழ்த்தியதும் உண்டு. 5ம் வகுப்பு வரையே இவரது முறையான கல்வி அமைந்தது.

இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசிடமிருந்து கற்றார். அப்துல்கரீம்கான் மற்றும் பாதே குலாம் கானின் இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.

திருமணம்

1940ல் திருநீலிமலையில் சுப்புலட்சுமிக்கும் சதாசிவத்துக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுடையே திருமணத்துக்குப் பின் நான்கு ஆண்டுகளில் ‘சதாசிவத்தின் முயற்சியால் உருவான ‘மீரா’ படத்தில் இடம்பெற்ற பாடல்கள் குறிப்பாக ‘காற்றினிலே வரும் கீதம்’ சங்கீத வட்டத்துக்கும் வெளியே இவருடைய புகழைப் பரப்பியது. இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே இவருக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தி தந்தது. அதே போல் கேதாரிநாத்திலிருந்து கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மிகக்குரல் பரவசப்படுத்தியது.

1944ல் 4 இசை நிகழ்ச்சிகள் நடத்தி ரூ. 2 கோடி வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதியில் மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத் தொண்டு ஆகியவற்றுக்காகச் செலவிடப்பட்டது.

சர்வதேச புகழ்

1963ல் இவரது புகழ் சர்வதேச அளவிலும் விரிந்தது. எடின்பர்க் சர்வதேச திருவிழாவில் இவரது கச்சேரி நடைபெற்றது. 1966ல் ஐ.நா. வில் ஐ.நா. தினத்தன்று பாடினார்.

1982ல் பிரிட்டனில் உள்ள ராயல் ஆல்பிரட் ஹாலில் ராணி எலிசபெத் முன்பு பாடினார். இது போன்ற நிகழ்ச்சிகள் சுப்புலட்சுமியின் இசைத்திறனை சர்வதேச அரங்குக்கு எடுத்து சென்றன.

ஒரு தொண்டை நிபுணர் இவரது குரல்வளத்தைக் கேட்டுவிட்டு, இவரது குரல் நாண்களின் சீரமைப்பு மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றார்.

பாரம்பரியக் கர்நாடக இசையில் வட இந்தியர்களிடம் கேட்கக் கிட்டாத தனித்தன்மையை இவரிடம் காணமுடியும். ராஜஸ்தான், பஞ்சாப், உ.பி., ம.பி., ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் உள்ள கர்நாடக இசை பிரியர்களிடம் இவரது செல்வாக்கு உயர்ந்தது. கர்நாடக இசையின் வரையறையையும் மதிப்பையும் இந்த 20ம் நூற்றாண்டில் இவர் மாற்றியவர் என்றால் மிகையன்று.

இவரது கணவர் சதாசிவம் காந்தி, நேரு, ராஜாஜி ஆகியோரிடம் இவரை அறிமுகப்படுத்தி வைத்தார். சதாசிவத்தின் நெருங்கிய தோழராக ராஜாஜி விளங்கினார். ‘குறை ஒன்றும் இல்லை’ என்ற கீதத்தை இவர் பாடியது இனிமையானது. இன்றும் பெரும்பாலாராலும் ரசிக்கும்படியாக உள்ளது.

ஹரி தும் ஹரோ

ஒரு சமயம் காந்தியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் காந்திக்கு பிடித்தமான ‘பஜனான ஹரி தும் ஹரோ’வைப் பாடும் படி குறிப்பிட்டிருந்தது. ஆனால் சதாசிவமோ அந்த கடிதத்துக்குப் பதில் அனுப்பிய போது, இந்த குறிப்பிட்ட பஜனை எவ்வாறு பாடுவது என்று சுப்புலட்சுமிக்குத் தெரியாது. ஆகவே ‘ஹரி தும் ஹரோ’ வேறொருவர் பாடட்டும். லட்சுமி மற்றொரு பாடல் பாடட்டும் என்று எழுதியிருந்தார். ஆனால் மகாத்மா காந்தியின் பதில் கடிதத்தில் ‘மற்றவர் பாடக் கேட்பதைவிட சுப்புலட்சுமி அதை பேசக கேட்பதையே விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தது.

1940ல் முதன்முதலாக இசைவாணிப் பட்டத்தைப் பெற்ற இவர் 1954ல் பத்மஸ்ரீ, 1956ல் ஜனாதிபதி விருது, 1974ல் மகசாசே விருது, பத்மவிபூஷன் 1990ல் இந்திராகாந்தி விருது, 1996ல் ‘கலாரத்னா’ விருது, 1997ல் ஸ்வரலயா, 7 டாக்டர் பட்டங்கள் என்று இவருடைய விருது பட்டங்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

பெற்ற விருதுகள்

1940 எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு ‘இசை வாணி’ கவுரவம் செம்மங்குடி சீனிவாச ஐயர் மற்றும் ராஜாமாணிக்கம் பிள்ளையால் வழங்கப்பட்டது
1954 பத்மபூஷன் வழங்கப்பட்டது
1956 ஜனாதிபதி விருது
1967 ரவீந்திரபாரதி பல்கலைக்கழகம் முதல் முதலாக டாக்டர் பட்டத்தை வழங்கியது
1968 சென்னை மியூசிக் அகாடமி ‘சங்கீத கலாநிதி’ கவுரவம் அளித்தது. இதனைப் பெற்ற முதல் பெண்மணி அவர்தான்.
1970 இசை பேரறிஞர் பட்டத்தை சென்னை தமிழ் இசைச்சங்கம் அளித்தது.
1974 மகசாசே விருது
1975 பத்விபூஷன் வழங்கப்பட்டது.
1975 சப்தகிரி சங்கீத வித்வான் மணி கவுரவத்தை திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வர தியாகராஜசுவாமி திருவிழா கமிட்டி அளித்தது.
1980 தனிப்பெரும் கலைஞர் தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கியது.
1981 சர்வதேச இசை கவுன்சில் உறுப்பினர்
1988 காளிதாஸ் சம்மன் வழங்கப்பட்டது
1988 உஸ்தாட் ஹபீஸ் அலிகான் விருது
1990 இந்திய ஒருமைப்பாட்டுக்கான இந்திராகாந்தி விருது
1991 கோனார்க் சம்மன் விருது வழங்கப்பட்டது
1995 7வது முறையாக டாக்டர் பட்டம்
1996 ‘கலாரத்னா’ விருது
1998 பாரத ரத்னா