ஆனந்தி, கல்கி, டிசம் 22, 2002

எம்.எஸ். பாட, நாங்கள் அபிநயம் பிடித்தோம். தனித் தனியாகவும், சேர்ந்தும் படங்களை எடுத்தார், அப்போது மிகப் பிரபலமான போட்டோ கிராபராக இருந்த நாகராஜ ராவ்.

அதுவரை எல்லா அயிட்டங்களையும் சேர்ந்தே பயிற்சி செய்து கொண்டிருந்த எங்களுக்கு, ஒரு வார காலமாக தனித் தனியாக ஆடப்பழக்கினார் ராமையாப் பிள்ளை. ஒரே அபிநயத்தை இரண்டு பேர் செய்தால் யாரைப் பார்ப்பது என்று புரியாமல், முழு உணர்ச்சி பாவத்தையும், பார்க்கிறவர்கள் அனுபவிக்க முடியாது, என்பது டி.கே.சியின் அபிப்பிராயம். அவர் சொல்வது சரியென்று எல்லாரும் ஒப்புக் கொள்ளவே, நானும் ராதாவும் நிருத்தம் சேர்ந்து செய்வது என்றும், அபநியம் தனித் தனியாகச் செய்வது என்றும், ஏற்பாடாயிற்று.

அரங்கேற்றத்துக்கு நடன உடைகள் தைக்க ஒரு சிங்கர் தையல் இயந்திரம், பீஸ் பீஸாகத் துணிகள், ஜரிகை பார்டர்கள், டிசைன் போட்ட புத்தகங்கள் எல்லாம் கல்கி பூங்காவின் மாடியில் சேகரித்து விட்டு, ஒரு தையல்காரரையும் வீட்டோ டு அமர்த்தி விட்டார்கள். இத்தனைப் பொறுப்பையும் நிர்வகித்து, எங்கள் உடைகளைத் தைப்பதற்கு, இரவும் பகலும் பாடுபட்ட இளைஞர் அனந்தநாராயணனை மறக்கவே முடியாது.

சதாசிவ மாமா, “ருக்மிணி தேவியின் டிரஸ் மாதிரி தைக்க முடியுமா பாரு!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பாவம், அந்தத் தையல்காரர் ஓர் அப்பாவி, “அவங்க யாருங்க?” எங்கே உடுப்பு தைக்கிறாங்க?” என்று கேட்டபோது, நான் எல்லாரிடமும் சொல்லிச் சொல்லி சிரித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

“புடைவை உடுத்திய மாதிரி இருக்கணும், பைஜாமா மாதிரியும் இருக்கணும்” என்பதால் அந்த டெய்லரும் ரொம்ப சிரத்தையாகக் காகிதத்தில் கத்தரித்துப் பார்த்துப் பிறகு, மட்ட ரகத் துணியில் (அப்போது சீட்டி என்று சொல்வோம்) தைத்துப் பார்த்து, பிறகு கொஞ்சம் நல்ல துணியை வெட்டித் தைத்து, நாங்கள் உடுத்திப் பார்த்தோம்.

பச்சை ஸாடின் துணியில் தங்க ஜரிகை ராதாவுக்கும் எனக்கும், மழமழவென்று அந்தத் துணியைத் தொட்டுப் பார்ப்பதிலேயே மகிழ்ச்சி.

சதாசிவமும் எம்.எஸ்.ஸும் பார்த்து விட்டு, “ரொம்பப் பளபளன்னு இருக்கு. நன்னா இல்லை..” என்று சொல்லி விட்டார்கள்!

பிறகு எம்.எஸ்., தாம் மீரா படத்தில் உடுத்திக் கொண்ட நீலமும் தங்க நிறமும் கலந்து புடைவையை எடுத்துக் கொடுத்தார். அந்தப் புடைவையை வெட்டவே டெய்லருக்கு மனமில்லை!

அதைத் தைத்துப் போட்டுக் கொண்டதும் ‘அப்ரூவ்’ ஆயிற்று! நான் கொஞ்சம் பெரியவளானதால், எனக்குச் சிறிய தாவணி போட வேண்டும் என்று என் அம்மா சொல்லிவிட்டார். இருவருக்கும் ஒரே மாதிரி இரண்டு உடைகள் தைத்தாயிற்று.

நகைகளிலும் கூர்ந்து கவனம் செலுத்தினார்கள். வர்ணம் வரை மாங்காய் மாலை (இரவல்) அபிநயத்துக்கு முத்துச் சரத்தில் மகரிப்பதக்கம், ‘ஆடுவோமே’க்கு பூமாலை என்று புதுமைகள்.

நிகழ்ச்சி நிரலும் நூதனமாகத் தயாராகி விட்டது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பாடல். அந்தப் பாடலுக்குரிய பாவத்தோடு ஒரு படம். இந்தச் சிறு புத்தகத்தை இரண்டு சலங்கைகளுடன் நூல் கோத்துத் தைத்திருந்தார்கள். வாத்தியார், எம்.எஸ் படங்களும் இருந்தன.

அரங்கேற்றத்துக்குத் தலைமை வகிக்க திருப்புகழ் மணி, டி.எம். கிருஷ்ணசாமி ஐயரை அழைத்திருந்தார்கள். முதல் மணி அடித்து, திரை விலகியது. சிறப்புத் திரையில் நந்தி பகவான் காட்சியளித்தார்.

திருப்புகழ் மணி வருவதற்குச் சில நிமிடங்கள் தாமதமாயிற்று. சபையோர் பலர் நின்று கொண்டிருந்தார்கள். பத்து நிமிடங்களிலேயே பொறுமை இழந்த சிலர் “சற்றே விலகி இரும்பிள்ளாய்; சந்நிதானம் மறைக்குதாம்” என்று நந்தி திரையைப் பார்த்துப் பாடத் தொடங்கி விட்டார்கள்! ஒரே சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.

அன்று வந்த அந்தக் கூட்டத்தைப் பற்றி அதிசயமாகப் பேசிக் கொண்டார்கள். நாங்கள் குழந்தைகள்தானே! எங்கள் நடனத்தைப் பார்க்கத்தான் இப்படிக் கூட்டம் என்று நினைத்துக் கொண்டோ ம். எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பதம் பாடியதுதான் கூட்டத்திற்குக் காரணம், என்று பிறகுதான் தெரிந்தது.

தோளில் குறுக்காக பூ மாலையை அணிந்து கொண்டு “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே” என்ற பாடலுக்கு நாங்கள் நடனமாடத் தொடங்கியதுமே, சபையில் ஒரே ஆரவாரம். முதலில் பாடலின் உணர்ச்சிச் செறிவு. சுதந்திரம் பெறுவதற்கு முன் அல்லவா? பிறகு இசையமைப்பின் கவர்ச்சி, பாடியவரின் குரல் வளம், நடன அமைப்பு எல்லாம் சேர்ந்து, அந்தப் பாடலுக்குப் பெரிய வரவேற்பு. அடிக்கு அடி கைதட்டினார்கள்.

பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம் பரி பூர ணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்

என்று எம்.எஸ். பாட, நாங்கள் ஆட, ரசிகர்களுக்கு எக்களிப்பே உண்டாகிவிட்டது. ஒரு தேசிய கீதத்தை பரத நாட்டிய பாணியில் நடனமாக ஆடியது ஒரு புதுமையாகவும், காலத்துக்குப் பொருத்தமாகவும் அமைந்தது.

கல்கி புனைந்திருந்த ‘மாலைப் பொழுதிலிலே’ பாடலும், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளித்தது. இதற்கும் எஸ்.வி. வெங்கட்ராமனே இசையத்திருந்தார். நான் நாயகியாகவும், ராதா முருகப் பெருமானாகவும் நடனமாடினோம். அன்று அது ஒரு புதிய உத்தி. வேடம் போட்டு ஆடவில்லை. தனித்தனியாக பாவம் பிடிப்பதில், அது ஒரு புதிய நாடக பாணியாக அமைந்தது. புள்ளி மயில் வீரன் மோஹனப் புன்னகை தான் புரிந்தான் என்று ராதா கள்ளமற்ற சிரிப்புச் சிரித்ததும் சபையோர் சிரித்து மகிழ்ந்தனர்.

ஒரு பரத நாட்டிய அரங்கேற்றம். மூன்று மணி நேரமும் ஆடியவர்கள் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுமிகள், சம்பிரதாயமான, ஆனால் புதுமையான உடை அலங்காரங்கள், அளவான மேக்அப், திருத்தமான நடனம், உயர்ந்த சங்கீதம், கச்சிதமாக எடிட் செய்யப்பட்ட உருப்படிகள், மயிலை சங்கீத சபாவின் சிறந்த ரசிகர்கள், என்று நிகழ்சசியின் வெற்றிக்குப் பல காரணங்கள். எல்லாமே தமிழ் உருப்படிகளாக இருந்ததால், சிறிது கூடத் தொய்வு ஏற்படவில்லையென்பதில் கல்வி. டி.கே.சி இருவருக்கும் பெருமிதம்.

சில நாட்களில் பாரதி விழா எட்டயபுரத்தில் நடந்தது. ‘ஆனந்தி – ராதா’ நடனம் வேண்டும் என்று ரசிகமணி கூறிவிட்டார். எம்.எஸ்.ஸின் இன்னிசைக் கச்சேரி – எங்கள் நடனக் கச்சேரி இரண்டும் ஏற்பாடாயிற்று.

பாரதி விழாவுக்காக மகாகவியின் புதிய பாடல் ஒன்றை அப்பா தேர்ந்தெடுத்தார்.

‘வெற்றி எட்டுத்திக்கு மெட்ட கொட்டு முரசே’ என்று மோஹன ராகத்தில் இசையமைத்தார் எஸ்.வி. வெங்கடராமன்.

வழக்கமான அலாரிப்பு, வர்ணத்தைச் சுருக்கமாக முடித்துக் கொண்டு, “ஆடுவோமே’ என்று எம்.எஸ். எடுத்ததும், அடாடா, அந்தக் கரகோஷம், நிஜமாகவே விண்ணை முட்டியிருக்கும். வெற்றி எட்டுத் திக்கும் எட்ட, கைகளைத் தட்டினார்கள்!

இப்படி தேசியப் பாடல்களுக்கு அபிநயம் செய்வதைப் பல பெரியோர்கள் பாராட்டினார்கள். இந்த இரண்டு பாடல்களும் அதே வர்ண மெட்டில், ஏ.வி.எ. எடுத்த ‘நாமிருவர்’ திரைப்படத்தில் குமாரி கமலா, ஆடி, நாடு முழுவதும் பிரசித்தமாயிற்று. பாடியவர் டி.கே. பட்டம்மாள்.

பிறகு சென்னை ராஜாஜி ஹாலில் கம்பர் விழா நடந்தது! ரசிகமணி அகத்துறை சாயலுடன் ஒரு பாடலையும், ராமபிரானுடைய அழகை மிதிலாபுரியின் கன்னியர் எவ்வாறு பார்த்துத் திகைத்தார்கள், என்ற பொருள் பொதிந்த பாடலையும், எடுத்துக் கொடுத்தார். “தோள் கண்டார் தோளே கண்டார்” என்ற பாடல் தத்துவார்த்தம் கொண்டது. பெண்களை முன்னிலைப்படுத்தி, பக்தியின் முதிர்ச்சி வெளிப்பாட்டை அலங்காரமாகக் கூறுவது.

இதற்கும் இசை அமைத்தவர் எஸ்.வி. வெங்கடராமன்தான்.

நடனம் தொடங்குவதற்கு முன்னால், டி.கே.சி. அப் பாடலை எடுத்து அவருக்கே உரிய பாணியில் விளக்கினார்.

‘கருணை செய்திடலாகாதா’ என்ற ஒரே வர்ணத்தைத் திரும்பத் திரும்பச் செய்து அலுத்து விட்டது.

பாபனாசம் சிவனிடம் தமிழில் ஒரு பத வர்ணம் இயற்றும்படி கேட்டுக் கொண்டார் சதாசிவம்.

“நீ இந்த மாயம் செய்தால்” என்ற தன்யாசி ராக வர்ணம் இயற்றி, ஸ்வர, தாளக் குறிப்புக்களுடன் அனுப்பி வைத்தார் சிவன். சிருங்கார ரஸமானாலும் சிறுமிகளான நாங்கள் ஆடுவதற்கு ஏற்றவாறு, மிக அழகாக அர்த்த பாவத்துடன் அமைந்திருந்தது.

ஆழ்வா பாசுரங்களை எடுத்துக் கொண்டு, அதை வர்ணம் போல் அமைத்துக் கற்றுக் கொடுத்தார் ராமையா பிள்ளை. ‘பச்சை மாமலைபோல் மேனி’ என்ற பாசுரத்தை ஏற்கனவே, எம்.எஸ் ரிகார்டு கொடுத்திருந்தார்கள். இப்படியாகத் தமிழ் மொழி எங்கள் கச்சேரிகளில் முதலிடம் பெற்றது. அந்தக் கால கட்டத்தில் இவை எல்லாமே புதிது.

தெலுங்கோ, வடமொழியோ வேண்டமென்று அவர்கள் ஒதுக்கவில்லை. பரத நாட்டியக் கலையை எல்லாரும் புரிந்து கொண்டு அனுபவிக்க வேண்டும், தமிழ் நாட்டில் நடனக் கலைக்கு வரவேற்பு ஏற்படவேண்டும் என்பதே, அவர்களுடைய எண்ணமாக இருந்தது.

தெலுங்கில் ‘மதுரா நகரிலோர்’ பாடலுக்கும், ‘ஸரஸிஜாக்ஷூலு’ என்ற சப்தத்துக்கும்கூட, நாங்கள் நடனமாடியிருக்கிறோம்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி., எம்.எஸ். சதாசிவம் சேர்ந்து நாட்டியக்கலைக்கு ஒரு சிறப்புத் தொண்டாற்றினார்கள். கல்கி, சிவகாமியின் சபதம் எழுத ஆரம்பித்த போது பரதக்கலை மேலும் பிரபலமடைந்தது. தமிழ்நாடு முழுவதும் சலங்கை ஒலி கேட்கவும், தமிழ்ப் பாடல்களை ஒலிக்கவும், இவர்கள் காரணமாக இருந்ததை, மறுக்கவோ மறக்கவோ முடியாது.

பெரியோர்களெல்லாம் சேர்ந்து சொல்லாலும், செயலாலும், எழுத்தாற்றலாலும், இசையாற்றலாலும், தமிழகத்தில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கினார்கள். அதில் நாங்கள் எங்களை யறியாமலேயே பங்கெடுத்துக் கொண்ட வாழ்ந்தோம், என்பதை இன்று நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.