கல்கி, ஜுன் 01, 1947

இந்த ‘கல்கி’ இதழின் அட்டைப் படத்தில் ஜொலிக்கிறவர்கள் யார், யார் என்று தெரிகிறதல்லவா? ஒருவர் சுதந்திர இந்தியாவின் பிரதம மந்திரி பண்டித ஜவாஹர்லால் நேரு. பாரதத் தாயின் சேவையிலிருந்து அவருடைய கவனத்தைச் சிறிது நேரத்துக்குக் கவர்ந்து இழுத்து, தன்னுடைய அன்பு வலையில் சிக்க வைத்த ஸ்ரீமதி…………… வேறு யாருமில்லை; பத்து வயதுக்குள் பரத நாட்டியக் கலையின் கரை கண்டு புகழ் பெற்ற குழந்தை ராதா.

புது தில்லியில் ‘பிளாஸா’ தியேட்டரில் ஹிந்தி ‘மீரா’ படம் பார்த்து முடிந்ததும், ஜவாஹர்லால்ஜி குழந்தை மீராவாக நடித்த ராதாவைத் தேடிக் கண்டு பிடித்துக் கட்டித் தழுவிக் கொண்டு மனமார்ந்த ஆசிகளைப் பொழிந்தார். அவருடைய கண்களிலே ததும்பும் கரை காணாக் கருணை வெள்ளத்தைக் கவனியுங்கள்.

‘திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்!’

என்று கவியரசர் பாரதியார் கூறினார். தமிழ்நாட்டின் கலைச்சிறப்பு உலகெல்லாம் பரவி ஒளி செய்ய வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு சொன்னார்.

பாரதியாரின் மனோரதத்தைச் சென்ற 1947ஆம் ஆண்டில் ஸ்ரீமதி எம்.எஸ் சுப்புலக்ஷ்மியும் அவருடைய செல்வப் புதல்வி குழந்தை ராதாவும் நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள். இவர்களுடைய அரும்பெரும் கலைப் பணியானது பாரதி மண்டப வைபவத்தைக் காட்டிலும் சொர்க்கவாசியான மகாகவியின் உள்ளத்தை மகிழ்வித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழில்வெளியான ‘மீரா’ படத்துக்கு ஹிந்தி உருவம் கொடுப்பதற்காக ஸ்ரீ சதாசிவம் ஒரு வருஷ காலமாகப் பிரயத்தனம் செய்து வந்த விவரத்தை நேயர்கள் அறிவார்கள். அவருடைய பெரும் பிரயத்தனம் 1947இல் பூர்த்தி பெற்றது.

ஹிந்தி ‘மீரா’வில் காட்சிகள் – தோற்றங்கள் பாத்திரங்கள் – நடிப்பு ஆகிய எல்லாம் பெரும்பாலும் தமிழ்படத்தில் உள்ளன போலவேதான்.

குழந்தை மீராவாக நடித்த செல்வி ராதாவும், ராணி மீராவாக நடித்த ஸ்ரீமதி எம்.எஸ் ஸும் ஹிந்திப் படத்தில் தாங்களே சுயமாக ஹிந்தி பாஷையில் பேசியிருக்கிறார்கள்; பாடியிருக்கிறார்கள்.

ஹிந்தி மீரா படத்துக்கு வட நாட்டார் அளித்த வரவேற்பு எத்தகையது என்று கேட்டால், அதை ‘1947ஆம் ஆண்டில் கலை உலகில் நிகழ்ந்த இணையில்லா அற்புதம்’ என்றே சொல்ல வேண்டும்.

படம் ஹிந்தியில் பெரும்பாலும் உருவான உடனேயே ஸ்ரீமதி சரோஜினி தேவி அதைப் பார்த்து விட்டு ஒரே ஆனந்த பரவசமாகி விட்டார். மீரா படத்தையும் ஸ்ரீமதி சுப்புலக்ஷ்மியையும் வட நாட்டாருக்கு அறிமுகப்படுத்துவதற்காகத் தாமே படத்தின் ஆரம்பத்தில் திரையிலே தோன்றிப் பேசவும் மனமுவந்தார். அவ்விதம் பேச முன்வந்த பிறகு, “அதெல்லாம் முடியாது; எம்.எஸ்.ஸை வட இந்தியர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்த மாட்டேன்; உலகத்துக்கேதான் அறிமுகப்படுத்துவேன்” என்று கூறி ஆங்கிலத்தில் அமுதகீத மொழிகளைப் பொழிந்தார். ஹிந்தி மீராவின் தொடக்கத்தில் ஸ்ரீமதி சரோஜினி திரையிலே தோன்றிப் பேசுவதைக் காணலாம்; கேட்கலாம்.

படம் முற்றும் உருவான பிறகு ரசிக சிகாமணியான பம்பாய் பிரதம மந்திரி ஸ்ரீ பி.ஜி. கேர் அவர்களும், உள்துறை மந்திரி ஸ்ரீ மொரார்ஜி தேசாய் அவர்களும், ஸ்ரீமதி லீலாவதி முன்ஷி முதலிய கலைஞர்களும் படத்தைப் பார்த்தார்கள். “இவ்வளவு சிறந்த தூய்மையான படத்தையும், இவ்வளவு இனிய கீதத்தையும் இதுவரை நாங்கள் பார்த்ததில்லை; கேட்டதில்லை” என்று சொன்னார்கள்.

ஹிந்தி சினிமாவைத் தூய்மைப்படுத்துவதற்காகப் பம்பாய் மந்திரி ஸ்ரீ மொரார்ஜி தேசாய் செய்து வரும் பெரு முயற்சியை நேயர்கள் அறிவார்கள். “இந்த மாதிரியே எல்லாரும் படம் எடுத்தால் சினிமா தணிக்கை போர்டே வேண்டியதில்லை” என்பது அவருடைய அபிப்பிராயம்.

முன்னொரு சமயம், அதாவது சுமார் ஆறு மாதத்துக்கு முன்பு, லார்ட் மவுண்ட் பேட்டன் இங்கிலாந்துக்குப் புறப்படும் தறுவாயில் அவருக்கும் ஜவாஹருக்கும் நடந்த சம்பாக்ஷணையைப் பற்றிக் ‘கல்கி’ இதழ் ஒன்றில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்தியாவின் அரசியல் சிக்கல்களைப் பற்றி மவுண்ட் பேட்டன் பிரபு தமது கவலைகளைத் தெரிவித்தார். அதற்கு ஜவாஹர்லால்ஜி, “உங்களுடைய கவலைகளைக் கொஞ்சம் மறந்திருப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. தென்னாட்டிலிருந்து எம்.எஸ். சுப்புலக்ஷ்மி வரப் போகிறார். அவருடைய கீதங்களைக் கேட்டால் எல்லாக் கவலைகளையும் சற்று நேரத்துக்கு மறந்திருக்கலாம். ஆனால் நீங்கள்தான் நாளைக்கே சீமைக்குப் புறப்படுகிறீர்களே?”

இந்தச் சம்பாஷணையை ஒருவித அதிசயோக்தியென்றும், மிகை செய்த கற்பனை என்றும் சிலர் எண்ணியிருக்கக் கூடும்.

எனினும், சென்ற வருஷக் கடைசியில் டிசம்பர் 5ஆம் தேதியன்று, புது தில்லியில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டு பிறகு தீர்மானிக்கக் கோருகிறோம்.

மேற்படி தேதியில் புதுதில்லி ‘பிளாஸா’ தியேட்டரில் ஹிந்தி மீரா திரையிடப்பட்டது. காஷ்மீரத்துத் தொல்லை…..